இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகளில் காலியிடம் சேகரிப்பு மே, 23க்கு பின் டிரான்ஸ்பர்

வெள்ளி, 10 மே, 2019

அரசு பள்ளிகளில், மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் காலியிட பட்டியல் சேகரிப்பு துவங்கியுள்ளது. விரைவில், அந்த இடங்களுக்கு, ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஒவ்வொரு ஆண்டும், மே மாதத்தில், கவுன்சிலிங் வழியாக இடமாற்றம் செய்யப்படுவர்.இதில், குறைந்த பட்சம், ஒரு கல்வி ஆண்டாவது பணிபுரிந்திருந்தால் மட்டுமே, இடமாற்றம் பெற, பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கும்.முதலில், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். பின், மாநில வாரியான இடமாற்றம் நடைபெறும். 


இந்த ஆண்டு, தேர்தல் வந்ததால், மே மாதம் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. அதேபோல, 2018ல் பட்டதாரி ஆசிரியர்களாக இருந்து, முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற தகுதியானவர்களுக்கு, பதவி உயர்வும், இடமாறுதலும் வழங்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பதவியில் இருப்பவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு கிடைக்க வில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டு லோக்சபா தேர்தல், பல கட்டமாக அறிவிக்கப்பட்டதால், ஆசிரியர்களுக்கான இடமாற்றம் மொத்தமாக முடங்கியது.வரும், 23ம் தேதி,தேர்தல் முடிவுகள் வெளியானதும், நடத்தை விதிகள் விலக்கப்படும். அதன்பின், உடனடியாக ஆசிரியர்கள் இடமாற்றத்தை நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதற்கு ஆயத்தமாக, மாவட்ட வாரியாக ஆசிரியர்கள் காலியிட பட்டியலை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது. இந்த பணி முடிந்ததும், மே, 23க்கு பின், ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக இடமாற்றம் செய்யப்படுவர் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent