இந்த வலைப்பதிவில் தேடு

செல்போன் முதல் ரிமோட் வரை... இந்த 7 பொருளிலும் ஏகப்பட்ட கிருமிகள்... உஷார்!

ஞாயிறு, 5 மே, 2019



கழிவறையில் இருக்கும் கிருமிகளைவிட நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் கிருமிகள் அதிகமிருப்பதாகச் சொல்கின்றன ஆய்வுகள். இண்டு, இடுக்கு விடாமல் எல்லா இடத்திலும் கிருமிகள் குவிந்திருக்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களும்கூட அதில் அடக்கம். எந்தெந்தப் பொருள்களிலெல்லாம் கிருமிகள் அடர்ந்திருக்கின்றன... அவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?

விளக்குகிறார், பொது நல மருத்துவர் அர்ஷத் அகில்.

செல்போன்

அதிக வியர்வை வெளியேறும்போது செல்போனை காதில் வைத்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பது, அசுத்தமான இடங்களில் செல்போனை வைப்பது, கழிவறையில் பயன்படுத்துவது போன்ற சூழல்களில் செல்போனில் கிருமிகள் உருவாகி, தொற்றுப்  பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கிருமித்தொற்று ஏற்படாமல் மொபைலைப் பாதுகாக்க, மேற்கூறிய செயல்களைத் தவிர்ப்பது மட்டுமே சிறந்த வழி. தினமும், செல்போன் கிளீனரை (Cell Phone Cleaner) சுத்தமான துணியைக் கொண்டு துடைப்பது நல்லது.

கைக்குட்டைகள்


இருமல், சளி, காய்ச்சல், வியர்வை மற்றும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் கைக்குட்டைகளின் வழியாக எளிதாகப் பரவும். சில வீடுகளில், கைக்குட்டைகள் அனைத்தையும், பொதுவாக ஒரே இடத்தில் வைத்திருப்பார்கள். அவற்றில் ஒன்று சரியாகத் துவைக்கப்படாமல் இருந்தால் மிக எளிதாகக் கிருமிகள் பரவும்.

இதுபோன்று கிருமிகள் பரவாமலிருக்க, ஒவ்வொருவரின் கைக்குட்டைகளையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்வது நல்லது. தொற்றுப் பிரச்னை இருப்பவர்களின் சிறு தும்மல்கூட அருகில் உள்ளவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சளி, தும்மல், காய்ச்சல் போன்ற உபாதை உள்ளவர்கள் கைக்குட்டையைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும், நாம் பயன்படுத்தும் கைக்குட்டையை அடுத்தவருக்குக் கொடுக்கக் கூடாது. அன்றாடம் கைக்குட்டைகளைத் துவைத்துவிடுவது நல்லது.



பணத்தாள்கள்... நாணயங்கள்!


செல்போனைப் போலவே இவற்றை வைக்குமிடத்தைப் பொறுத்து கிருமித்தொற்று ஏற்படும். சில நேரங்களில், நீண்டநாள் சேகரித்துவைத்த நாணயங்களைப் பயன்படுத்துவோம். அவற்றிலுள்ள கிருமிகள், பிரச்னையை ஏற்படுத்தலாம். பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அதிகம் சேர்ந்துவிட்டால் வங்கியில் கொடுத்து புதிய தாள்கள் வாங்கிக்கொள்ளலாம். மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ரிமோட்!

ரிமோட்டை சோபாவுக்கு அடியில் வைப்பது, படுக்கை விரிப்பில் வைப்பது, உணவுவேளையில் டைனிங் டேபிளில் வைப்பது, தரை அல்லது மேசையில் வைப்பது என கை எட்டும் இடத்திலெல்லாம் வைத்துவிடுவோம். டி.வி, ஏ.சி போன்ற சாதனங்கள் அதிகரிக்க, அதிகரிக்க, ரிமோட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆனால், எல்லா இடங்களும் சுத்தமாக இருப்பதில்லை. குழந்தைகள் ரிமோட்டை வாயில் வைத்துக் கடிக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் நோய்த்தொற்று ஏற்படலாம். சோபா அல்லது தரையில் வைக்கும் ஒரு ரிமோட், உணவுப் பண்டங்கள் மீது பட்டால் மிக எளிதாகக் கிருமிகள் தொற்றிக்கொள்ளும்.

நேரம் கிடைக்கும்போது ஈரத்துணியால் ரிமோட்டைத் துடைக்க வேண்டும். ஒரு கையில் ரிமோட், இன்னொரு கையில் உணவு என்று இருப்பவர்கள், அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். ரிமோட் ஸ்டாண்ட் வாங்கி அதில் வைக்கலாம்.



தாழ்ப்பாள்

பொது இடங்களில் உள்ள கதவுகள், கைப்பிடிகள், தாழ்ப்பாள் போன்றவற்றைப் பலரும் பயன்படுத்துவார்கள். அதன்மூலம் அவற்றின்மீது கிருமிகள் படர்ந்துவிடும். இதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும், வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் முகம், கை கால்களை நன்றாகக் கழுவிவிட்டு வருவது நல்லது. இதன்மூலம், கைகளில் உள்ள கிருமி பரவாமல் தடுக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில், உணவருந்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், கைகளை நன்றாகக் கழுவிவிட வேண்டும்.


கிச்சன் கட்டிங் போர்டு

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், சமையலறையில் பயன்படுத்தப்படும் கட்டிங் போர்டுகளில் டாய்லெட் ஷீட்டைவிட 200 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இறைச்சி வகைகள், கடல் உணவுகள் போன்றவற்றைச் சுத்தம் செய்யும்போது இத்தகைய கிருமிகள் அதில் படர்வதாகத் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

அசைவம் சமைக்க நேர்ந்தால், வேலை முடிந்ததும் கட்டிங் போர்டை சுத்தமாகக் கழுவ வேண்டும். அசைவத்துக்கென்று தனியாக ஒரு கட்டிங் போர்டை வாங்கிப் பயன்படுத்துவது சிறப்பு. கட்டிங் போர்டை சுத்தப்படுத்த ஸ்பாஞ்ச் பயன்படுத்தினால், அதில் படர்ந்துள்ள ஈரப்பதம்கூட கிருமித்தொற்றை ஏற்படுத்தித் சருமப் பிரச்னைகளை உருவாக்கலாம். எனவே, ஸ்பாஞ்ச் பயன்படுத்தியதும், அதைச் சுத்தமான தண்ணீரில் கழுவி, காயவைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.



மெனு கார்டு

ஹோட்டல்களில் உங்களுக்கு முன்னதாக வந்த வாடிக்கையாளர் டேபிளில் விட்டுச் சென்ற கிருமிகள் மெனு கார்டு, சால்ட் அண்ட் பெப்பர், கெட்ச் அப் கிண்ணங்களில் அப்படியே இருக்கும். நீங்கள் அவற்றில் கை வைத்துவிட்டு அப்படியே சாப்பிட்டால், வாய் வழியாக நோய்க் கிருமிகள் உள்ளே சென்று உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்.

இவற்றைத் தவிர்க்க, மெனு கார்டைப் பயன்படுத்தி ஃபுட் ஆர்டர் செய்ததும் கையைக் கழுவி விட்டுச் சாப்பிட உட்கார வேண்டும். சால்ட் அண்ட் பெப்பர், கெட்ச் அப் கிண்ணங்களை டிஷ்ஷூ பேப்பரைக் கொண்டு பயன்படுத்தலாம். எந்தச் சூழலிலும், சாப்பிடும் கையால் அந்தக் கிண்ணங்களைத் தொட வேண்டாம்.


கவனமாக இருக்க வேண்டியவர்கள்...

* மருத்துவர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப், கிளவுஸ், அவர்கள் அணியும் கோட் போன்றவைகூட நோயாளிகளுக்கு கிருமிகளைப் பரப்பலாம். எனவே, மற்றவர்களைவிட மருத்துவர்கள் கூடுதல் கவனமாகச் செயல்பட வேண்டும்.

* மெடிக்கல் ரெப், மருந்து விற்பனையாளர்கள், செவிலியர்கள் தங்களது வேலையின் நடுவே நோயாளிகள் பலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், கவனமாகச் செயல்பட வேண்டும்.

* பேருந்து நடத்துநர்களும் ரிஸ்க் லிஸ்டில் இருப்பவர்கள். கவனமாக இருக்க வேண்டும். அவ்வப்போது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.



* சேல்ஸ் மேன், டெலிவரி பாய்ஸ் ஆகியோர் நிறைய இடங்களுக்குப் போக வேண்டியிருக்கும். அவர்கள் வெவ்வேறு பார்சல்களை தொடர்ச்சியாகச் சுமக்க வேண்டியிருக்கும். எனவே அவர்கள் சுகாதாரம் தொடர்பான விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

* குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மூலமும் கிருமிகள் பரவலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும் என்பதால், அவர்கள் எளிதாகப் பாதிக்கப்படுவர். எனவே அவர்களைக் கூடுதல் அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவருந்தச் செல்லும்முன், கைகளை நன்றாகக் கழுவ வேண்டியது அவசியம். வாய்ப்புள்ளவர்கள், `சானிடைசர்' (Sanitiser) அல்லது `ஸ்டெரிலியம் சொல்யூஷன்' (Sterillium Solution) பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும், கிருமித்தொற்றுகளால் ஏற்படும் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம். எனவே, உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent