இந்த வலைப்பதிவில் தேடு

TET தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் - கல்வித்துறை நடவடிக்கை!

ஞாயிறு, 5 மே, 2019


டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடு முடிந்ததை அடுத்து, இதில் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நடக்க உள்ள டெட் தேர்வு வரை அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் ‘இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்’, 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறுகிற மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராக பணியாற்றுபவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற ஆசிரியர்களுக்கு 2016-ம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர்அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட சூழலில், தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில், ‘தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கெடு முடிந்துவிட்டது. தேர்ச்சிபெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்டவாரியாகதனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 

இதனால், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 28 ஆயிரம் ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டில் பணியில் நீடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.இதுதவிர, அரசுப் பள்ளிகளில் சுமார் 500 ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து இத்துறையைச் சார்ந்தவர்கள் கூறியதாவது:தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் தியாகராஜன்: கல்வி உரிமை சட்டப்படி ஆண்டுக்கு 2 முறை என 8 ஆண்டுகளில் 16 முறை டெட் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் 4 முறை மட்டுமே நடந்ததால், பல ஆசிரியர் களால் தேர்ச்சிபெற முடியவில்லை. கடைசியாக 2017-ல் டெட் தேர்வு நடந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் டெட் அறிவிப்பை தேர்வு வாரியம்வெளியிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, ஆசிரியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதால் அவர்களது குடும்பங்கள் மன உளைச்சலில் தவிக்கின்றன. எனவே, டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

கருணை அடிப்படையில் விலக்கு

தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் நந்தகுமார்: உயர் நீதிமன்ற அறிவிப்பால் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 26 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் வேலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டெட் தேர்வு எழுதி தேர்ச்சிபெற, ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.பல ஆசிரியர்கள் பள்ளிகளில் பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பல மாணவர்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளனர். வகுப்பறையில் அவர்கள் ஒரே பாடத்தை நடத்திவிட்டு, தகுதித் தேர்வில் அனைத்து பாடங்களையும் எழுதும்போது சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதை மனதில் வைத்தும், ஆசிரியர்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் கருணை அடிப்படையில் டெட் தேர்வில் இருந்து முழு விலக்கு அளிக்கவேண்டும். விரைவில் நடக்கவுள்ள டெட் தேர்வுவரையேனும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent