சிவகங்கை, பழமலை நகரில் 300-க்கும் அதிகமான நாடோடியின மக்கள் குடியிருந்து வருகின்றனர். நாடோடி வாழ்க்கை வாழும் இந்த மக்கள் இரவு நேரங்களில் வேட்டைக்குச் சென்று முயல் போன்ற விலங்களைப் பிடித்து வந்து உணவகங்களில் விற்பனை செய்து வந்தனர். வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட நிலையில், போலீஸார் அவர்களின் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். இதனால் தொழில் இழந்து நிற்கதியாக இருக்கும் இவர்களுக்கு மாற்றுத் தொழில் தெரியாது. அரசாங்கமும் இவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஒருசிலர் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
பழமலை நகரில் வசித்துவரும் சிவானந்தத்தின் மகன் சிவம், சிவகங்கை கே.ஆர் மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பாசி ஊசி மணிகளை திருவிழா நடக்கும் இடங்களில் விற்பனை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தியதோடு, மகனையும் படிக்க வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 232 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றிபெற்றிருக்கிறார் சிவம். கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக பத்தாம் வகுப்புத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கும் மாணவரின் வெற்றியை அந்தக் கிராம மக்கள் விழாபோல் கொண்டாடியிருக்கிறார்கள். மாணவனுக்கு மாலை அணிவித்து தோளில் சுமந்து, தங்களின் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், மாணவரை நேரில் சென்று பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக