கல்வி சமூகத்திற்கானது என்பதனை முன்னிறுத்தி 2016 முதல் இதனைச்சார்ந்து மாற்றத்தினை விரும்பி சமுதாய நோக்கோடு பல்வேறு தளங்களில் தமிழ்நாடு முழுவதும் செயல்படும் ஆசிரியர்களை இனம் கண்டு ஒருங்கிணைத்தும், ஊக்கப்படுத்தியும் வருகிறது கல்வியாளர்கள் சங்கமம் . அதனடிப்படையில் இந்த ஆண்டு மே 10,11&12 ஆகிய மூன்று நாள்கள் இராமேஸ்வரத்தில் *கலாம் மண்ணில் ஒரு கனவுத்திருவிழா* என்ற பெயரில் *இதனால் சகலமானவர்களுக்கும்* என்னும் சங்கமம் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இதனது இரண்டாம் நாள் நிகழ்வில், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை செயலருமான திருமிகு.உதயச்சந்திரன் அய்யா அவர்களுடன் இணையம் வழியாக காணொளி வழியில் ஆசிரியர்களுடலான கலந்துரையாடல் நிகழ்ச்சி
நடைப்பெற்றது..
இந்த அமர்வில் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்..
ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் சமுதாய நோக்கோடு கல்வியை கடமை உணர்வோடு செயல்பட்டால், இந்த சமூகத்திற்கு என்ன தேவையோ அதை வழங்கினால் இந்த சமூகம் அவர்களைக் கொண்டாடும் எனக்குறிப்பிட்டு, அதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
சக மனிதனுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை வழங்குவதைவிட மிகச்சிறந்த கற்பித்தல் எதுவும் இருந்துவிடப்போவதில்லை எனவும் ஆசிரியர்களது பணியின் அவசியத்தை குறிப்பிட்டது சிறப்பிற்குரியதாக இருந்தது.
சமூகம் உங்களைப் பின்பற்ற வேண்டும் என்றால், உங்களது பணி இந்த சமூகத்திற்கு பயன்பாடு உடையதாக இருக்க வேண்டும் எனவும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.
கல்வியாளர்கள் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார், மாணவர்கள் போட்டித்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தேர்வு முறை மாற்றத்திற்கான சாத்திய கூறுகள் பற்றி வினா எழுப்பி கலந்துரையாடலை துவங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் சேர்க்கை, தொழில்நுட்பத்தைக் கையாளுதல், ஆங்கில வழிக்கற்றல், பள்ளி கட்டமைப்பு, தாய்மொழிக் கற்றல் ,மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தல், மாணவர்களை சுய சார்போடு வாழ வகை செய்தல், தொழி்ற்பயிற்சி, கீழடி அகழ்வாராய்ச்சி போன்ற பல்வேறு தலைப்பு சார்ந்த வினாக்களை ஆசிரியர்கள் எழுப்பி ஆர்வமுடன் கலந்துரையாடல் செய்தனர்.இதை சார்ந்த விளக்கங்களை மிகவும் பொறுமையாக நிதானத்துடனும் விளக்கமாகவும் பதில் அளித்து சிறப்பித்தார் *தொல்லியல் துறை முதன்மைச்செயலாளர் திருமிகு.உதயச்சந்திரன்.*
இது போன்ற கலந்துரையாடல்கள் தான் எங்களை மேலும் பண்படுத்தி அடுத்த நகர்விற்கும் ஊக்கத்துடன் செயலாற்றவும் அடித்தளமாக அமையும் என்பதனை பங்கு பெற்ற ஆசிரியர்கள் உற்சாகமாக கூறினர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக