இந்த வலைப்பதிவில் தேடு

தொடக்கக் கல்வியும் தொடர் சோதனையும்!

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019



ஆயிரம் மைல் ஓட்டம் கூட ஒரு முதல் அடியில்தான் தொடங்குகிறது. மிக உயர்ந்த கல்வி பெற்றவர்களுக்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது தொடக்கக் கல்வியே!

அங்கே தொடங்கி வைக்கும் தீபம்தான் உலகுக்குகே வெளிச்சம் கொடுப்பதாக அமையும். எனவேதான் ஒவ்வொருவருக்கும் தொடக்கக் கல்வி இன்றியமையாததாகிறது!

தொடக்கக் கல்வியைப் பற்றி மேலை நாட்டு கல்வியாளர்களும், நமது கல்வியாளர்களும் உரத்த குரலில் சொல்வது தொடக்கக் கல்வி சரியானதாக அமைய வேண்டும் என்பதே.

நம் நாட்டைப் பொறுத்தவரை உயர்நிலைக் கல்விதான் வியாபாரமாகி விட்டது என்றால் தொடக்கக் கல்வியிலும் அந்த நோய் தொற்றிக் கொண்டு விட்டதே! இதனால்தான் தொடக்கக் கல்வியில் இத்தனை சோதனைகளா?

ஒரு காலத்தில் தொடக்கக் கல்வியில் ஒழுக்கம், பண்பாடு, நன்னெறிக் கல்வி, விளையாட்டு என்று கட்டாயமாக்கப்பட்ட கற்றல் முறைகள் இருந்தவை மாறிப்போய் தற்போது மனித எந்திரங்களை உருவாக்கும் முறைக்கு மாறிவிட்டனவே... அது ஏன்?

விவேகானந்தர், அரவிந்தர், தாகூர், காந்திஜி போன்றவர்கள் வலியுறுத்திய நன்னெறிக் கல்வி மறைந்து போனது ஏன்? மாறாக பண மையக் கல்வியானது ஏன்?

இந்திய தேசியக் கல்விக் கொள்கையில் ஆரம்பித்து இன்றைய யஷ்பால், டா. ராதாகிருஷ்ணன், மால்கம் ஆதிஷேஷய்யா, முத்துக்குமரன் கமிட்டி வரை எத்தனையோ கல்விக் குழுக்கள் பரிந்துரைத்தும் தொடக்கக் கல்வி சீரடையவில்லையே என்ற ஆதங்கம் எழத்தானே செய்கிறது.

மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம், சர்வ சிக்ஷா அபியான், சமச்சீர் கல்வித் திட்டம் என்று பல சோதனைகளுக்குட்பட்டது தொடக்கக் கல்வி. இதெல்லாம் காலத்தின் பரிணாம வளர்ச்சி. இத்தனை சோதனைகள் செய்தும் தொடக்கக் கல்வி தரம் தாழ்ந்து போய்விட்டதே. மேற்கூறிய புதிய கல்வி அணுகுமுறைகளில் கோளாறா.. அல்லது நடைமுறையில் எதிர்பார்த்த செயலாக்கம் பெறவில்லையா?

கடந்த 15 ஆண்டுகளில் தொடக்கக் கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம்! தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இக் கல்வித் திட்டம் 2002-க்குப் பிறகு எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில்! காரணம் தாய் திட்டம் ஓரளவுக்கு எதிர்பார்த்த பலனைக் கொடுத்ததே. இது தொடக்கக் கல்வியில் ஒரு உத்வேகத்தையும், மாணவர்களின் கற்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது என்பது 1994 முதல் 2002 வரை தொடக்கப் பள்ளிகளில் கண்கூடாகத் தெரிந்தது!

அதன் பிறகுதான் சமச்சீர் கல்வி முறை தமிழ்நாட்டில் 2010ல் புகுத்தப்பட்டது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடவும் ஒரே சீரான கல்வி முறை தமிழ்நாட்டில் வேண்டும் என்றும் இது அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வந்த அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ - இந்தியப் பள்ளிகள் மற்ரும் ஓரியன்டல் பள்ளிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அடுத்து வந்த அரசு ""சமச்சீர் கல்வியில் தரம் இல்லை'' என்று சொல்லி உச்ச நீதிமன்றம் வரை சென்று கல்வியை சோதித்தது!

இக் கல்வி முறையில் கிரேடு வழங்கும் முறையில் தேர்வுகள் இருப்பினும் இக் கல்வியில் தரம் இல்லை என்று கூறியது. அத்துடன் உயர்கல்வியில் போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்களின் கல்வித் தரம் தாழ்ந்து போனதற்கு மேற்கண்ட சமச்சீர் கல்வி முறையே காரணம் என்று அரசு முடிவெடுத்து எல்லா அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில மொழிவழிப் பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2012-13-ல் 320 பள்ளிகளில் பரிட்சார்த்தமாக புகுத்தப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி முறை 2013-14-ல் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது!

இதன் தொடர்ச்சியாக மூன்று பருவக் கல்வி முறை புகுத்தப்பட்டு ஓராண்டில் மூன்று தேர்வுகள் வைத்து மாணவர்களின் தரத்தை சோதித்தது.

தற்போது திடீரென்று தொடக்கப் பள்ளியில் நவீன தொழில்நுட்பக் கல்வி முறை சென்னை நகராட்சிகளில் பரிட்சார்த்தமாக புகுத்தப்பட்டது. அதாவது கற்றலுக்குத் துணை போகும் உபகரணங்களான கணினி மற்றும் இணையதளம் மூலம் ஆசிரியர் இல்லாமலே கூட வகுப்பறையில் கற்றல் நிகழ்த்தலாம் என ஆர்பரித்து வருகின்றது. ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போதே கல்வியில் தரம் இல்லை என்று கூவுகின்றவர்கள் ஆசிரியரே இல்லாமல் கற்றால் தரம் கூடி விடுமா என்ன?

எல்லாத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான். கல்வியிலும் வருவதை வரவேற்கலாம். இந்த புதிய சோதனைகள் எல்லாம் எதை மையப்படுத்தி வருகின்றது? தரமான கல்விக்குத்தானே? ஆனாலும் பொதுமக்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்ற தரமான கல்வி வந்து விடவில்லையே. அது என்ன மர்மம்?

இங்கேதான் நாம் அப்துல்கலாம் சொன்ன யோசனையை சிந்திக்க வேண்டும்.

"இந்தியா கிராமங்களில் உள்ளது. எனவே கல்வியும் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகவும், அதே நேரத்தில் நன்னெறிக் கல்வி அடிப்படையிலும் கல்வியின் கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் அமைய வேண்டும்' என்றார் அவர்.

ஆனால் நிஜத்தில் என்ன நிலைமை? ஆங்கில மொழிவழிக் கல்வியின் மோகத்தால் தாய்மொழி வழிக் கல்வி புறம்போனது. குழந்தைகளை நகரத்து தனியார் பள்ளிகளுக்கு உயர் கட்டணம் செலுத்தி அனுப்புவதோடு கிராமங்களிலும் தனியார் பள்ளிகள் பெருகி அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகின்றனர்! இதற்குக் காரணம் கல்வி முறையின் பாதகமா, இல்லை பெற்றோர்களின் ஆங்கில மோகமா? எப்போது ஒரு மாணவன் தாய்மொழியை விடுத்து அன்னிய மொழியில் சிந்திக்கவும், பேசவும், எழுதவும், செயல்படவும் ஆரம்பிக்கிறானோ.. அப்போதே கல்வியின் தரம் போய்விட்டது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதால் மட்டுமே தரம் வந்துவிடாது. மாறாக கற்கும் மாணவரிடத்தே வர்க்க பேதத்தை உருவாக்கிவிடும். மீண்டும் ஆங்கில ஆட்சியின் கல்வி முறைக்கே தொடக்கக் கல்வியும் சென்று விடும்!

எப்போது தாய்மொழி வழிக் கல்வியையும், நன்னெறிக் கல்வியையும் நாம் மறந்தோமோ.. அப்போதே சுய சிந்தனை மங்கிவிட்டது.

உலகத்தின் எல்லாக் கல்வியாளர்களும் தொடக்கக் கல்வியில் வலியுறுத்துவது இரண்டு முக்கிய விஷயங்கள்தாம். ஒன்று தாய்மொழி வழிக் கல்வி, இன்னொன்று குழந்தை மையக் கல்வியில் நன்னெறி கலப்பது. இது உயர்கல்வி வரை தொடர வேண்டும். நவீன கற்றல் தொழில் நுட்பங்களை நமது தாய்மொழியில் பயன்படுத்தி, உயர்ந்த மனித நேயமான ஆன்மிகம் சார்ந்த நன்னெறிக் கல்வியை நோக்கி நமது கல்வி முறை எப்போது பயணப்பபயணப்படுகிறதோ, அப்போது தான் தரமான கல்வியை நமது குழந்தைகள் பெற முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent