இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர் காவல் படை என்ற ‘ஸ்டூடண்ட் போலீஸ் கேடர்’ குழுக்களை பள்ளிகளில் உருவாக்க தமிழக அரசு உத்தரவு.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019



தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இளைய சமுதாயத்தின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. பள்ளி மாணவ பருவத்திலேயே அவர்கள் நிலை தடுமாறி செல்லும் சூழல் நிலவுவதுடன், பள்ளி வளாகங்களிலேயே வன்முறை சம்பவங்கள்  மாணவர்களால் அரங்கேற்றப்படுகின்றன. ஆசிரியர்கள், மாணவர்களிடையேயான உறவும் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலை மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பள்ளிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை  என பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களை சமூக கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவாக்கவும், சட்டத்தை மதித்தும், போக்குவரத்து  விதிகளை அறிந்தும் நடக்கும் வகையில் மாணவர் காவல் படை என்ற ‘ஸ்டூடண்ட் போலீஸ் கேடர்’ குழுக்களை பள்ளிகளில் உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மொத்தம் 22 மாணவ, மாணவிகளும், 9 மற்றும் 10ம் வகுப்புகளில் 22 மாணவ, மாணவிகளும் என ஒரு பள்ளிக்கு மொத்தம் 44 பேரை கொண்டு இக்குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுக்களுக்கு  இருபாலர் பள்ளி எனில் ஒரு ஆண் ஆசிரியரும், ஒரு பெண் ஆசிரியரும் பொறுப்பேற்பர். ஒரு பாலர் பள்ளி எனில் அதற்கேற்ப ஒரு ஆசிரியரோ, ஆசிரியையோ பொறுப்பேற்பர். இக்குழுக்கள் வாரம் ஒரு நாள் பள்ளி நேரம் முடிந்து ஒரு மணி  நேரம் காவல் நிலையங்களிலோ அல்லது போக்குவரத்து போலீசாருடன் இணைந்தோ சேவையாற்றுவர்.

ஏற்கனவே நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீரமைப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மரம்  நடுதல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை போன்றே மாணவர் காவல் படைக்குழுக்களும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent