அரசு பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி பெறும் மாணவியருக்கு, பேரீச்சம் பழம் உள்ளிட்ட, சத்தான பொருட்கள் வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.'பெண் குழந்தைகளை பாதுகாப்போம்; பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்' என்ற வாசகத்துடன், பெண் குழந்தைகளுக்கு, சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பயிற்சிக்கு, ஆரோக்கியமான, திடகாத்திரமான மாணவியரை தேர்வு செய்து, அவர்களின் உடல் நலன் பாதிக்காத வகையில், பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கராத்தே, ஜூடோ, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும், யோகா வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில், பயிற்சிக்கு வரும் மாணவியருக்கு, வேர்க்கடலை, பேரீச்சம் பழம் உட்பட, விட்டமின் சத்துக்கள் நிறைந்த பொருட்கள் வழங்கவும், அதற்கு, அரசிடம் நிதி பெற்றுக் கொள்ளும்படியும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக