இந்த வலைப்பதிவில் தேடு

அடுத்தடுத்து பொதுத்தேர்வு - என்னவாகும் எதிர்கால சமுதாயம் - விரிவான அலசல்

திங்கள், 23 செப்டம்பர், 2019




பெரும்பாலான கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆய்வாளர்கள் எதிர்த்துள்ள நிலையில், கவலையை வெளிப்படுத்திய நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்தது என்பது குழந்தைகளுக்கு எதிரான ஒருவித வன்முறை  தானே. ரசியல்வாதிகளின் அதிகார வளையத்துக்குள் சிக்கி, பொதுமக்களை வதைக்கும் பல விஷயங்களில் கல்வி மிக முக்கியமானது. கடைச்சரக்காகி விட்ட கல்வி இப்போது அரசியல் ஆக்கப்படுகிறதா என்ற கேள்வி சாமான்ய மக்களின்  மனதில் எழ ஆரம்பித்து விட்டது.



அகில இந்திய அளவில் பன்னெடுங்காலமாக கல்வியில் பெரும் புரட்சியை செய்தது தமிழகம் தான். பல அறிஞர்கள்,விஞ்ஞானிகள், வல்லுனர்கள் உருவான பூமி இது. சத்துணவு திட்டத்தை கொடுத்த காமராஜில் துவங்கி, கலைஞர், எம்ஜிஆர்  ஆகியோர் முதல்வர்களாக இருந்தபோது, கல்வியை எங்கும் கொண்டு போய்ச்சேர்த்து பெரும் சமூக மாற்றங்கள் உருவானது என்பது அரசியல் அறிந்தவர்களுக்கு தெரியும். சத்தான உணவை தந்து, மிடுக்கான சீருடையில் வலம் வரச்செய்து, இலவசமாக பாடபுத்தகங்கள், சைக்கிள் எல்லாம் தந்தாலும், மத்திய  அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்பதன் மூலம் பெரும் சீர்கேட்டுக்கு வழிவகுத்து விட்டதா தமிழக  அரசு என்று கல்வியாளர்கள் வேதனைப்படுகின்றனர். எந்த கல்விக்காக கிராமங்களில் குழந்தைகளை ஈர்க்க இவற்றை எல்லாம் தந்தார்களோ, அதே கல்வி இப்போது பிஞ்சுகளை மனஅழுத்தத்துக்குள் தள்ளி விடும் அபாயம் உள்ளது.

பொதுத்தேர்வை பிஞ்சுகளிடம் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையால், மீண்டும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் போக்கு அதிகரிக்கும் என்பதை நாம் உணர வேண்டும். கல்வி என்பது கல்வியாளர்கள் கையில் தான் இருக்க வேண்டும்; அதை கேலிக்கூத்தாக்கும் அளவுக்கு அரசியல்வாதிகள் ‘போட்டுடைக்க’ வேண்டாம் என்பது தான் பெற்றோர்களின் ஆதங்கம். ஏற்கனவே பல அரசு பள்ளிகளை மூடி நூலகமாக  மாற்றுகிறது அரசு; இன்னொரு பக்கம் இந்தி திணிப்புக்கு முயற்சி நடக்கிறது. இப்படி சிக்கித்தவிக்கின்றனர் மாணவர்கள். எதிர்கால சமுதாயம் சின்னாபின்னமாக அனுமதிக்க கூடாது. 

இதோ நான்கு கோணங்களில்  ஒரு  அலசல்:


ஏழை மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்: எஸ்டிகே.ராஜன், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பள்ளிகள் மேலாளர்



தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் என்று அனைவராலும் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரால் 17 ஆயிரம் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. அப்படி தான் கல்விக்கு வித்திடப்பட்டது; வளர்க்கப்பட்டது; இது போதாதென்று, கல்வி கற்க  ஈர்க்க வேண்டும் என்பதால் மக்களின் வறுமை கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தார்; அதன் பலன் தான்  மாணவர்கள் பசியாற மதிய உணவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால், அன்று ஏழை மாணவர்கள் பள்ளிக்கூடம்  செல்ல ஆரம்பித்தனர்.
இந்த கல்வித்திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக டாக்டர் எம்ஜிஆர் உலகத்திற்கே முன்னோடியாக சத்துணவு திட்டத்தை செயல்படுத்தினார். டாக்டர் கலைஞர் சத்துணவுத்திட்டம் சத்தான திட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக  சத்துணவோடு முட்டையினை வழங்க திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் அதை செயல்படுத்தி கல்வித்துறைக்கு பெருமை சேர்த்தார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தினம்தோறும் முட்டையுடன் ஊட்டசத்து நிறைந்த பயிர்வகைகளையும் மதிய உணவில் சேர்த்தார். இவைகள் எல்லாம் ஏழை மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும்  ஏற்படுத்தப்பட்டவை.


பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைவாக இருக்கக் கூடாது, உணவுக்காகவாவது மாணவர்கள் பள்ளிக்கு வந்தால்,  இதோடு 2005ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அனைவருக்கும் கட்டாயக்கல்வி என்ற சட்டத்தின் மூலமாக 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்பட்டனர். மேலும், வயது வந்தோருக்கும் கல்வி வழங்க முடிவு  செய்யப்பட்டது; அதற்காக வயது வந்தோருக்கான வகுப்பு என்ற சட்டம் மூலமாக மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாக குறைந்தது. இதனால், அனைத்து ஏழை மாணவர்களும் கட்டாயமாக கல்வி கற்று வருகின்றனர். மாணவர்கள்  மேல்வகுப்பிற்கு செல்ல தகுதி உடையவர்களாகி வருகின்றனர். கீழ் வகுப்பில் விளையாட்டு பிள்ளைகளாயிருந்தாலும் மேல்வகுப்பில் தங்களது பொறுப்பை உணர்வு படித்து வெற்றி பெற்று சரித்திரத்தில் தடம்பதித்து வருகின்றனர்.

கிராம பள்ளிகளில் படித்துத்தான் விஞ்ஞானியாக இருந்து, ஜனாதிபதியான அப்துல்கலாம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன் ஆகியோர் சாதனை படைத்தனர். தற்போதைய அரசின் 5,8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உள்ளத்தில் ஒரு விதமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பொதுத்தேர்வுகளை சந்திக்கும்  மாணவர்களின் மனஅழுத்தம் எப்படியிருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். இந்த அறிவிப்பால் என்ன விளைவு ஏற்படும் தெரியுமா? புதிய கல்விக்கொள்கையால், பொதுத்தேர்வை சந்திக்கும் அச்சம், பீதி அதிகரித்து, கடைசியில்  ஏழை மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், ஏழை  மாணவர்கள் தங்களது தந்தையின் தொழிலுக்கே செல்லும் சூழல் உருவாகக்கூடும். உளவியலாளர்களின் கருத்துப்படி சிறு வயதிலேயே பொதுத்தேர்வு என்பது இளஞ்சிறார்களின் மனதில் ஒரு வித குழப்பத்தையும் கலக்கத்தையும் உண்டாக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

எனவே, தமிழக அரசு தற்போது  5,8ம் வகுப்புகளுக்கு அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவித்ததை நிரந்தரமாக 5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை என அறிவிக்க வேண்டும் இதன் மூலம் இளஞ்சிறார்கள் மனதில் மகிழ்ச்சியும் தொடர்ந்து  உயர்கல்வி பயில வாய்ப்பாக அமையும். சமதர்ம சமுதாயம் மலர அனைவருக்கும் கல்வியும் உழைப்பும் போதுமானது என்று பெருந்தலைவர் காமராஜர் கூறியிருக்கிறார். அதை இந்த அரசு செயல்படுத்துவதன் மூலம் கல்வி அனைவருக்கும்  பொதுவானது என்ற நிலை உருவாகும். புதிய கல்விக்கொள்கையால், பொதுத்தேர்வை சந்திக்கும் அச்சம், பீதி அதிகரித்து, கடைசியில் ஏழை மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

5ம் வகுப்புக்கே கோச்சிங் மையங்கள் பெருகி விடும்: அருமைநாதன், தமிழ்நாடு மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க மாநில தலைவர்



மாணவர்கள், பெற்றோர்கள் வீட்டில் சும்மா இருக்கக்கூடாது. அவர்கள் நிம்மதியாக தூங்கக்கூடாது என்று நினைக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அது தான் உண்மை. 5ம் வகுப்பில் இருந்தே  பொதுத்தேர்வுக்கு போகிறார்கள் என்று சொல்லி மாணவர்களை டென்ஷன் ஆக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி பெற்றோர்கள் டென்ஷன் ஆகிறார்கள். இதை பார்த்து ஆசிரியர்களும் டென்ஷன் ஆகின்றனர். பெற்றோரும், ஆசிரியரும் ேசர்ந்து மாணவருக்கு அழுத்தம் கொடுப்பார்கள். மாணவர்கள் விளையாட  முடியாது; நிம்மதியாக தூங்க முடியாது; அந்த அளவுக்கு  பொதுத்தேர்வு வருது, வருது என்று படிக்க சொல்வார்கள். பெற்றோர்களோ  பாவம்; ‘ நாம் எப்படி சொல்லி தர முடியும்’ என அந்த மாணவர்களை கோச்சிங் வகுப்புக்கு அனுப்புவார்கள்.

 ஐஐடி, நீட் தேர்வு கோச்சிங் மையம் அமைக்கப்பட்டது. இப்போது 5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கும் கோச்சிங் மையம் வந்து விடும். சாதாரண வீட்டு பிள்ளைகள் கோச்சிங் கொடுத்து படிக்க வைக்க முடியாது. ஒழுங்கா வேலை பார்த்து விட்டு  பள்ளியில் வந்து படிக்கும் பிள்ளைகள் கோச்சிங் செல்ல முடியாமல் பரீட்சையிலும் தேர்ச்சி பெற முடியாமல் அவமானப்பட்டு பள்ளியில் இருந்தே வெளியேறி விடுவார்கள். நல்ல வசதியான பிள்ளைகள் மட்டும் படித்து தேர்ச்சி பெறட்டும்.  அவர்கள் தொடர்ந்து படித்தால் போதும் என்று அரசு நினைக்கிறது. கடைசியில் மேட்டுகுடி பிள்ளைகள் எந்தவிதமான போட்டிகள் இல்லாமல் உயர்கல்விக்கு போவார்கள். இது தான் நடக்கும்.


தற்போது பள்ளிகளில் இடைநிற்றல் என்ற நிலை இல்லை. குறைந்து போய் விட்டது என்று அரசு கூறுகிறது. 5ம் வகுப்பு, 8ம்வகுப்பு பொதுத்தேர்வு வைத்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 5ம் வகுப்பு பரீட்சை வைத்தால் பெற்றோர்கள், ஆசிரியர்கள்  படிக்க வைக்க கஷ்டப்படுவார்கள். அந்த குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு என்றால் என்னவென்று தெரியாது. இப்போது இருக்கிற பிள்ளைகள் சின்ன அவமானத்தை தாங்கி கொள்ள முடிவதில்லை. பள்ளியை விட்டு செல்ல போகிறார்கள். இல்லை  வீட்டை விட்டு ஓடி போய் விடுவார்கள்.பிள்ளைகளின் திறமையை அதிகரிக்க பொதுத்தேர்வு வைப்பதாக கூறுகின்றனர். ஏற்கனவே, காலாண்டு, அரையாண்டு, மாதிரி வைத்து ரேங்க் கார்டு கொடுக்கின்றனர். பொதுத்தேர்வு வைப்பதால் தான் அவன் திறமையானவன் என்று சொல்ல  முடியாது. வகுப்பு ஆசிரியர் ஒரு மாணவன் திறமை என்ன, அவரை மேம்படுத்துவது எப்படி என்பது அவருக்கு தெரியும்.  

பொதுத்தேர்வு வைத்து தான் ஒரு மாணவன் திறமையானவன் என்று சோதிக்க முடியாது. மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து பொதுத்தேர்வு என்பதை அரசு ஏற்றுக்கொள்ளக்  கூடாது. அமைச்சர் செங்கோட்டையன் கூட பொதுத்தேர்வு இல்லை எனக்கூறினார். ஆனால், எங்களது சங்கம் சார்பில் செயலாளரை சந்தித்து கேட்டால் அவர் மத்திய அரசின் முடிவு  என்கிறார். மத்திய அரசு சொல்வதை செய்யும் அரசாக  உள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்களையோ, கல்வியாளர்களையோ கலந்தாலேசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். வசதியான பிள்ளைகள் மட்டும் படித்து தேர்ச்சி பெறட்டும். அவர்கள் தொடர்ந்து படித்தால் போதும் என்று அரசு நினைக்கிறது. வசதியில்லாத குழந்தைகள் பின்தங்கி, பின்தங்கி பள்ளியை விட்டு சென்று விடுவார்கள்.

பெற்றோர்களை இயந்திரமயமாக்கி விடும்: அபிலாஷா, சைக்காலஜிஸ்ட் டாக்டர்



5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது அவசியம் இல்லை இது தேவையில்லாமல் மனஅழுத்தம் தான். அந்த வயதில் அவர்கள் அனைத்திலும் டெவலப் பண்ண வேண்டும்.  படிப்பில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.  ஓட்ட பந்தயத்தில் ஓடவிட்டால்  முதலில் நான் ஓட வேண்டும் என்ற எண்ணம் வரும்.  இப்போது 10,12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியும். அதை மாதிரி 5,8 ம் வகுப்பு அப்படியே பெற்றோர்கள் ஆகிவிடுவார்கள். 

அவர்களின் வாழ்க்கையே இயந்திரமயமாகி விடும். படிப்பு எல்லாம்  கொஞ்சம் தாமதமாக தான் வரும். அதாவது, நிறைய பேருக்கு 9,10ம் வகுப்புகளில் தான் படிக்கணும் என்ற எண்ணம் வரும். அது வரை விளையாட்டுத்தனமாக இருப்பார்கள் அதற்கு அப்புறம் படிப்பார்கள். ஆனால் 5,8ம் வகுப்புகளில் நன்றாக  படிக்க மாட்டார்கள் என்று முத்திரை குத்திவிட்டால் அவர்களை மாற்றுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் போய்விடும். மாணவர்கள் தன்னம்பிக்கை போய்விடும். இது மாணவர்களுக்கு எந்த வகையில் வாழ்க்கைக்கு மாற்றம் கொடுக்கும் என்று தெரியவில்லை. ெசயல்முறை அறிவு வேண்டும் என்று அவர்களுடைய பெற்றோர்களுக்கு கொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு அழகியல், பெயிண்டிங் மற்றும்  கிரியேட்டிவ் அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் பண்ணி பேப்பரில் அப்படியே எழுத வேண்டும். அதிலும் செய்முறை பயிற்சி கொடுக்கிறார்கள். அதுவும் இப்போது பெற்றோர்கள் தான் செய்கின்றனர்.  இப்போது அதற்கும் கடைகள் உள்ளது.


விளையாட்டு, இலக்கியம், டான்ஸ் போன்றவைக்கு மதிப்பெண் கொடுக்கலாம். மாணவர்களுக்கு என்ன வருகிறதோ அதை கற்றுக்கொள் என்று கூறலாம். அனைவரும், டாக்டர் ஆகனும் என்கிறபோது தான் போட்டி அதிகமாகிறது. 100 பேரும்  நல்ல மதிப்பெண் வாங்கனும், டாக்டர் ஆகனும் என்கிறபோது அனைவரும் நல்ல டாக்டராக இருக்க முடியாது. ஆனால் 50 பேர் வெவ்வேறு துறைகளில் சென்றிருந்தால் அந்தந்த துறைகளில் நல்ல நிலைக்கு வந்திருப்பார்கள்.  முதலில் இருந்து  என்ன படிக்க வேண்டும் என்பதை அவர்களை தேர்வு செய்து கொடுத்திருக்கும் வாய்ப்பை தர வேண்டும். 

ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை படித்து சொல்லிவிட்டால் நாம் வெற்றி பெறமுடியும். மனப்பாடம் பண்ணி எழுதுவது மட்டும் படிப்பு இல்லை. 5,8ம் வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு வைத்தால் மற்ற படிப்புகள் எல்லாம் விளையாடுவதற்கா?. தற்போது 11ம் வகுப்புகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களை நடத்துவது போல் அடுத்து 7ம் வகுப்புகளில் 8ம் வகுப்பிற்கான பாடங்களை நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இது வந்து தேவையில்லாமல் மாணவர்கள், பெற்றோர்களுக்கு  அழுத்தம் தான். இன்னும் இரண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் அந்த தேர்வுக்கு ஆசிரியர் நியமிக்க வேண்டும், பேப்பர் திருத்த வேண்டும் இது அவசியம் இல்லாதது.

5,8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது தேவையில்லை. அதில் பெரிதாக  எந்த பயன்களும் இல்லை. ஆனால் மற்ற நாடுகளில் பாடத்திட்டத்தில் இல்லாத கூடுதல் திறன்களை மேம்படுத்துவதில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  நம்முடைய நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சரியான அணுகுமுறை, பயிற்சி இல்லாததால் தான் பின்தங்கி உள்ளனர். ஒரு சில நாடுகளில் கூடுதல் திறன்களை மேம்படுத்தினால், அதற்கென மதிப்பெண் கொடுக்கின்றனர்.  விளையாட்டு என்பதும் ஒரு வேலை தான் யாருக்கு வருகிறதோ, அவர்கள் அதில் திறன்களை மேம்படுத்தி வெற்றி பெறலாம். அதுவும் நாட்டிற்கும் ெபருமை தான்.பிளஸ்2 பாடங்களை நடத்துவது போல் அடுத்து 8ம் வகுப்பிற்கான பாடங்களை 7ம் வகுப்புகளில் நடத்த ஆரம்பித்து விடுவார்கள். இது வந்து தேவையில்லாமல் மாணவர்கள், பெற்றோர்களுக்கு அழுத்தம் தான்.

தேர்வு என்பது மாணவனை புத்திசாலியாக்கி விடாது: அர்ஜூனன், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்



கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருவதே பெரும்பாலும் கஷ்டம் தான். அரசு பள்ளிகளில் விவசாயத்தை நம்பி இருக்க கூடிய குழந்தைகள், ஏழை குழந்தைகள் தான் பெரும்பாலும் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் பயமின்றி பள்ளி வர  வேண்டுமென்றால் 5ம்வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு இருக்க கூடாது. அரசு தரமான கல்வியை வழங்குகிறது. அந்த தரமான கல்வி வழங்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, மாதாந்திர தேர்வு நடத்தப்பட்டு தான்  வருகிறது. இது, அந்த மாணவர்களின் திறமையை நிரூபித்து காட்டுகிறது.பொதுத்தேர்வு என்றால் கூட எப்பேர்பட்ட ஆளாக இருந்தாலும் ஒரு நடுக்கம் வரத்தான் செய்யும். அந்த மாதிரி குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு  நடத்தக் கூடாது. அரசு பள்ளிகளில் நமது மாணவர்கள் தமிழ்வழி கல்வியில் தான் பெரும்பாலும் படிக்கின்றனர்.


அந்த குழந்தைகளுக்கு கல்வியை பலப்படுத்தவும், தரப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம், ஆசிரியரின் நோக்கம். அடித்தட்டு மக்களும்  நன்றாக படித்து மேலே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நாங்கள் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறோம்.இந்த நிலையில் 5ம் வகுப்பு, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதால், அது மாணவர்களின் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். தரமான மாணவர்களை உருவாக்குவதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி தரலாம். அந்த மாணவர்களை  மேம்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்கள் மேம்படுத்தலாம். 

அதை செய்யாமல் ஒரு தேர்வு என்பது ஒருவனை புத்திசாலியாகவோ, முட்டாளாக்கவோ ஆக்கி விடாது. தேர்வு நேரத்தில் ஒரு மாணவனின் உடல் நிலை சரியில்லாமல் போகலாம்.  குடும்ப பிரச்னை காரணமாக கூட ஒரு மாணவன் படிக்காமல் போகலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில் குறைந்த மதிப்பெண் பெற்ற அந்த மாணவன் பெறுவதை மதிப்பீடு செய்வது சரியான செயலாக இருக்காது என்று நான் பார்க்கிறேன்.  வயல்களில் வேலை செய்யும் குழந்தைகள், ஆட்டோ ஓட்டும் குழந்தைகள்,கூலித் தொழிலாளர் குழந்தைகள் படிக்க வேண்டும். இந்த மாதிரி பொதுத்தேர்வு வரும் போது அவர்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிவிடும்.இதன் நோக்கம் எப்படியாக  இருந்தாலும் சரி. கிராமப்புற மாணவர்களை கடுமையாக பாதிக்கும். இதனால், இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


சாதாரண தேர்வு என்றால் மாணவர்கள் பயப்பட மாட்டார்கள். பொதுத்தேர்வு என்றால் ஒரு பயம் இருக்கும். நமது கல்வி அமைச்சர் பின்லாந்து சென்று வந்தார். அங்கு, எல்கேஜி, யுகேஜி கிடையாது. அங்கு ஒரு மாணவன் புரிந்து கொள்கிற  வயதில் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர். எப்போது ஒரு மாணவன் புரிந்து படிக்கிறானோ அப்போது தான் அவன் சிறந்தவனாக உருவாகிறான். மனப்பாடம் வைத்து ஒரு பரீட்சைக்கு மாணவன் படிக்க கூடாது. அந்த மாணவன் பார்த்தது, உணர்ந்ததில் இருந்து கேள்வி கேட்க வேண்டும். 

ஒவ்வொரு மாணவனுக்கு ஒவ்வொரு திறமை உள்ளது. அந்த மாணவனின் திறமையை  வெளிக்கொண்டு வர வேண்டும். அதை விடுத்து அந்த மாணவனுக்கு ெபாதுத்தேர்வு என்ற பெயரில் பயமுறுத்தி மன உளைச்சலை ஏற்படுத்த கூடாது. இதை அரசு நன்கு புரிந்து கொண்டு செயல்பட்டால் மாணவ சந்ததிகளின் எதிர்காலம்  பிரகாசமாக இருக்கும். இடைநிற்றல் என்ற நிலை இருக்கவே இருக்காது.நமது கல்வி அமைச்சர் பின்லாந்து சென்று வந்தார். அங்கு, எல்கேஜி, யுகேஜி கிடையாது. அங்கு ஒரு மாணவன் புரிந்து கொள்கிற வயதில் தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent