இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வில் புது தகவல்

செவ்வாய், 3 செப்டம்பர், 2019



குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற மனநிலை, கிராமப்புறங்களில் அதிகரித்து வருவது, அரசுப்பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட சிறப்பு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகிக்கிறது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த 8 ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.


மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் கிராமங்களில் கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என்ற பேச்சு பரவலாக உள்ளது. ஆனால், கிராமங்களிலும் குடும்பத்துக்கு ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளும் மனோபாவம் தற்போது அதிகரித்து வருவதாக, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சேலம் அடுத்த உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் வழிகாட்டுதலின்படி, விரிவுரையாளர்கள் ரமேஷ்குமார் மற்றும் மான்விழி ஆகியோர், ‘‘ஒற்றைக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் சமூக இணக்கம், கற்றல் அடைவில் ஏற்படும் பாதிப்புகள்’’ குறித்த ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். 

இந்த ஆய்வு,  மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், குடும்பத்தில் ஒரே பிள்ளையாக பிறந்து, அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், நகர்ப்புற மனோபாவத்துக்கு இணையாக, கிராமப் பகுதிகளிலும் ஒற்றைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, நகர்ப்புறத்தை காட்டிலும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஒற்றைக் குழந்தைகள் திறன் மிக்கவர்களாக காணப்படுவதும், பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது. 


இது குறித்து ஆய்வு மேற்கொண்ட விரிவுரையாளர்கள் கூறியதாவது: 

அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில், ஒற்றைக் குழந்தை என்பது சட்டமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆண் குழந்தை பிறக்கும் வரை, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று என குறைந்தது 2 குழந்தையாவது பெற்றுக் கொள்ளும் எண்ணமும் இருந்து வந்தது. இந்த எண்ணம் சமீப காலமாக மாறி வருகிறது. பெருகிவரும் தனிக்குடும்ப வாழ்க்கை முறை, பொருளாதார காரணங்கள், சமூக அங்கீகாரம் உள்ளிட்ட காரணங்களால், ஒற்றை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஆய்வின்போது, ஒற்றைக் குழந்தைகள், அவர்களுடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நேரடியாக கருத்துக்கள் பெறப்பட்டன. 

இதில், ஆண் குழந்தை மட்டுமல்ல, பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், பெரும்பான்மையான ஒற்றைக் குழந்தைகள் பெண் குழந்தைகளாகவே உள்ளனர். பெற்றோர் ஒரு குழந்தை போதும் என்று நினைக்கும் நிலையில், குழந்தைகள் தங்களுக்கு ஓர் சகோதரனோ, சகோதரியோ வேண்டும் என எண்ணுகின்றனர். ஒரு சில பெற்றோர்கள் மட்டும், குழந்தைகள் மீது மிக அதிக கவனத்தை செலுத்துகின்றனர். இவர்கள் குழந்தைகளை விளையாடவோ, கடினமான செயல்களை செய்யவோ அனுமதிப்பதில்லை. தங்களின் ஒரே குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்ற அச்சமே இதற்கு காரணம். கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளை சார்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு அளிப்பதால், அவர்களின் முடிவெடுக்கும் திறன், சொல்லாற்றல், மற்றவர்களுடன் பழகும் திறன் ஆகியவை நகர்ப்புற மாணவர்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


ஆய்வின் முக்கிய முடிவுகள்

* ஒற்றை குழந்தைகளில் 86.6 % பேர், தாங்கள் தனியாக இருப்பதாக உணரவில்லை. மாறாக, நண்பர்கள், உறவினர்களுடன் சகஜமாக பேசி, விளையாடுகின்றனர். அதேசமயம், 13.3% பேர் தனிமையில் இருப்பதாக உணருகின்றனர். 

* பெற்றோரின் பயம் காரணமாக, 30 பேரில் 2 குழந்தைகள் நண்பர்களுடன் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. 

* 23.3% மாணவர்கள் படிப்பில் சிறப்பாகவும், 56.5% பேர் சராசரியாகவும், 10% பேர் சராசரிக்கு குறைவாகவும் உள்ளனர். 

* 66.5% சதவீத மாணவர்கள், திறன் மிக்கவர்களாகவும், சக நண்பர்களுடன் இயல்பாகவும் பழகுகின்றனர். 

* 30 பேரில் 7 மாணவர்கள், தங்களுடன் விளையாட சகோதரன் அல்லது சகோதரி தேவை என எதிர்பார்க்கின்றனர். ஆனால், அனைவரும் தங்களது பெற்றோர்களிடம் மனநிறைவுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

உறவுமுறை தெரியாமல் போக வாய்ப்பு 

மக்கள் தொகை பெருகி வரும் இந்தியாவுக்கு ஒற்றை குழந்தை நிலை அவசியமானது தான். ஆனால், அதேசமயம், அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா, பெரியப்பா-பெரியம்மா போன்ற உறவுகளை பற்றி தெரியாமலே போய் விடும் நிலை உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

திறன் மிக்கவர்களாக விளங்கும் குழந்தைகள்

ஒற்றை குழந்தைகள் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘பொதுவாக இந்தக் குழந்தைகள் அனைவரிடமும் எளிதாக பழகுகின்றனர். எந்த ஒரு வீட்டு பாடத்தையும், மற்ற குழந்தைகளைக் காட்டிலும் விரைந்து முடித்து விடுகின்றனர். அதேசமயம், மற்றவர்கள் முன் தம்மை எதுவும் கூற கூடாது என்பதில் கவனமுடன் இருக்கின்றனர். இதற்காகவே அனைத்து வேலைகளையும் கவனமுடன் விரைந்து முடித்து விடுகின்றனர். இந்தப் பண்பு அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு பயன்படுகிறது,’ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent