இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களின் வாழ்த்து செய்திகள்

வியாழன், 5 செப்டம்பர், 2019



ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.பன்வாரிலால் புரோகித் (தமிழக கவர்னர்): மாநிலத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்களுடைய சைகைகள், அசைவுகள் ஒவ்வொன்றும் மாணவர்களுக்குள்ளே பதிவாகும். இதனால் தான் காந்தி  சொல்வார் ஆசிரியர்களே மாணவர்களின் உண்மையான புத்தகம். ேமலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சாதித்துக் காட்ட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி (முதல்வர்): 

பெற்றோர்களுக்கு அடுத்த படியாகத் தம்மிடம் பயிலும் மாணவக் கண்மணிகளிடம் அன்பு காட்டி, அரவணைத்து, வழிகாட்டுவதன் மூலமே அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்று, சமுதாய வளர்ச்சிக்கு உதவிட  முடியும் என்பதை அறிந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அதன்படி செயல்பட்டு, ஆசிரியப் பணிக்கு மிகப் பெரிய பெருமையைத் தேடித் தந்தார். அப்பெருமகனார் காட்டிய வழியில் ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் தங்களுடைய மாணாக்கருக்கு  நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் கற்பித்து, சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

கவலைகள் எதுவும் இல்லாமல், மகிழ்ச்சியான மனநிலையில் ஆசிரியர்கள் இருக்கும் நாட்டில் தான் கல்வி வளம் பொங்கிப் பெருகும் என்பது உண்மை. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாடத்திட்ட மாற்றம்,  தேர்வுமுறை சீர்திருத்தம் என்பன உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவை வரவேற்கப்பட வேண்டியவை. அதே நேரத்தில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன்,  அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி, சாதிப்பதற்காக இந்த நல்ல நாளில்  தமிழக மக்களாகிய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.


கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): 

ஒரு நல்ல ஆசிரியராக தமது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய மாபெரும் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக இந்தியா  முழுவதும் கொண்டாடி வருகிறோம். அனைத்து நல்லொழுக்கங்களையும் மாணவர்களுக்கு கற்றுத் தருகிற ஆசிரியர்களை போற்றுகிற நாள். ஒரு மாணவன் நல்ல குடிமகனாக, ஒளிமயமான எதிர்காலம் கொண்ட மனிதனாக உருவாக்குவதில்  ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை. ஒழுக்கம், பண்பு, பொது அறிவு என அனைத்தையும் இளமை பருவத்தில் போதிப்பதன் மூலம் எதிர்கால இந்தியாவில் அறிவுத் திறன்  மிக்கவர்களாக விளங்குவதற்கு ஆசிரியர்கள் பெரும் துணையாக இருக்கிறார்கள்.  

  விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): 

வருங்கால தலைமுறைகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு பள்ளிக்கூட ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. வெறும் ஏட்டுக்கல்வியோடு மட்டும் நில்லாது, வாழ்வியல் நெறிமுறைகளையும்  நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொடுத்து, ஒவ்வொரு மாணவரும் இந்த நாட்டின் நல்ல குடிமகனாக வாழ வழிகாட்டி இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறந்த முறையில் மாற்றி அமைக்கும் ஒரு யாகம்தான் ஆசிரியப்பணியாகும். அந்த பணியில்  தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் அப்துல்கலாம் ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகும். ஆசிரியர்  பெருமக்களின் அனைத்து முயற்சிகளுக்கும் தேமுதிக என்றும் துணை நிற்கும். 

அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): 

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் தான். விவசாயிகள் முதல் பொறியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், அறிவியலாளர்கள் வரை அனைவரையும்  உருவாக்கித் தருபவர்கள் ஆசிரியர்கள் தான். மாபெரும் வல்லுனர்களை உருவாக்கித் தருபவர்களாக இருந்தாலும் ஆசிரியர்கள் கடைசி வரை ஆசிரியர்களாகத் தான் இருப்பார்கள். ஆசிரியர்களை மிகவும் மரியாதையாக நடத்துவதுடன், கடந்த  காலங்களில் இருந்ததைப் போன்று அதிகாரத்திலும் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல், ஆசிரியர்களும் கல்வியில் மட்டுமின்றி அணுகுமுறையிலும், வாழ்க்கை நெறிகளிலும் சிறந்த மாணவர்களை  உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.


ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): 

உலகில்  உள்ள ஒவ்வொருவரும் குழந்தை முதல் பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் என  படிப்படியாக மேற்படிப்பு படித்து முடித்து உயர்ந்து தான் சார்ந்திருக்கும்  பணியில் சிறந்து விளங்குவதற்கும்,  நல்வாழ்க்கை வாழ்வதற்கும் கல்வியே  அடிப்படையானது என்பதால் அந்த கல்வியை கற்றுத் தரும் ஆசிரியர் தான்  சமுதாயத்தில் முதன்மையான, முக்கியத்துவம் வாய்ந்த மனிதர் ஆவார்.  ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பணியை  சரியாக, முறையாக, அர்ப்பணிப்போடு  மேற்கொள்வதால் அவர்களுக்கு சமுதாயத்தில் எப்போதும் நற்பெயர் இருக்கிறது.  ஆசிரியர்கள் தங்களின் மேலான பணியை தொடர்ந்து மேற்கொண்டு மாணவர்களின்  நம்பிக்கைக்குரியவர்கள் என்பதை  நிரூபிக்க வேண்டும்.

டிடிவி. தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்)

கல்விச் சூழல் எந்த அளவிற்கு மாணவர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும். ஆசிரியர் பணி என்பது வெறுமனே எழுத, படிக்க சொல்லித் தருவது மட்டுமல்ல. நற்பண்பு, ஒழுக்கம், மனிதவாழ்வின்  உயர்ந்த மதிப்பீடுகள், சமூக அக்கறை உட்பட சிறந்த மனிதனுக்கு தேவையான குணங்களையும் மாணவர் மனதில் விதைத்து, வளர்த்தெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் ஆசிரியப் பெருமக்களுக்கு இருக்கிறது. அதனால் தான் நம்முடைய  முன்னோர்கள் பெற்றோருக்கு அடுத்த இடத்தில் குருவை வைத்துக் கொண்டாட சொல்லித் தந்திருக்கிறார்கள்.    

 சரத்குமார் (சமக தலைவர்): 

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது, ஏனைய திறன் வளர்த்தல், குணநலன் பேணல், ஒழுக்கம், பொது அறிவு என பல்வேறு வழிகளில் மாணவர்களை பயிற்றுவிக்கும், ஆசிரியர்களின் கல்வி வளர்ச்சி பணி  போற்றுதலுக்குரியது. சமூகத்திற்கு சிறந்த மனிதரை உருவாக்கி அனுப்பும் தலையாய பொறுப்பேற்று, மாணவர்களின் வாழ்வு சிறக்க தன்னலமின்றி அன்றாடம் உழைக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent