இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகளைவித்துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் - பின்லாந்து சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

வியாழன், 5 செப்டம்பர், 2019




தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பின்லாந்து நாட்டின் கல்விச்சூழல், மாணவர்களின் திறன் மற்றும் கற்கும் கற்பிக்கும் முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.


இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பின்லாந்து நாட்டில் படிக்கும் மாணவர்கள், வாழ்க்கையை எதிர்கொள்ளும் வகையிலும், சமூகத்தில் சிறந்த அந்தஸ்தை ஏற்படுத்தும் வகையிலும் கல்வி கற்றுக் கொடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர், அங்கு உயர்நிலை கல்வி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்சாலைகளுக்கு சென்று தொழிற்கல்வியை கற்று கொள்வதாக கூறினார்.

இதனால் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் பெற்றோர்களின் துணையின்றி அந்த மாணவர்களால் சுயமாக வாழ முடிவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார். இதேபோல் தமிழக மாணவர்களிடையே தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் தமிழக ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பின்லாந்தில் உள்ள தமிழ் நூலகத்திற்கு வரும் 15 நாட்களுக்குள் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலும் தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ள 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை நாட்களில் தொழிற்சாலைக்கு சென்று பணியை கற்று கொள்ளவும், படித்து முடித்ததும் அதே தொழிற்சாலையில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் புதிதாக கொண்டு வரப்படவுள்ள கல்வி முறையில் தொழிற்கல்வியும் சேர்க்கப்படவுள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent