இந்த வலைப்பதிவில் தேடு

அரசு வழங்கும் ஆசிரியர் தினப் பரிசு இதுதானா?

வியாழன், 5 செப்டம்பர், 2019



ஆசிரியர் தினம் கொண்டாட உள்ள நிலையில், ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் சொத்து விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவர்களை  குற்றம்சாட்டுவது போல அரசு அறிவித்திருப்பது மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களை பணியாளரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். அதில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையினரின் அறிக்கைப்படி அந்த ஆசிரியர் அல்லது பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட அறிவுரைகளை கல்வித்துறை அதிகாரிகள் தவறாமல் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கே.இளமாறன் ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “ஆசிரியர்கள் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்ற இந்த அறிவிப்பு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற ஒன்றை பெரிதுபடுத்தி சொத்து விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருப்பது, அதிலும் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களை குற்றம்சாட்டுவது போல அறிவித்திருப்பது ஆசிரியர்களிடையே மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அரசு துறைகளிலேயே சொத்து சேர்க்க முடியாதாவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் நாங்கள் இன்னும் கடனில்தான் இருக்கிறோம். அப்படியே ஏதாவது சொத்து வாங்கினாலும் ஆசிரியர்கள் முறையாகத்தான் அதை வாங்குகிறார்கள். முறையாக வரி செலுத்துகிறார்கள். இப்படி இருக்கையில், அரசு ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற ஒன்றை இப்படி பெரிது ஆசிரியர் தினம் கொண்டாட உள்ள நிலையில் அவசர அவசரமாக அறிவித்திருப்பது வேதனையானது. எங்களின் அதிருப்தியை முறையாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து தெரிவிப்போம்.

அதோடு, ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆசிரியர்களுக்கு ஒழுங்கு தேவை. பயோமெட்ரிக் பதிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் முறையாக உரிய நேரத்தில் பள்ளியைத் திறந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசு அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே நான் பயிற்றுவிக்கும் சென்னை கொடுங்கையூர் உயர்நிலைப்பள்ளியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவை பயன்படுத்தியவர்கள் என்பதால் எங்களுக்கு இதனால் எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால், அரசு இது போன்ற அறிவிப்புகளை இனிமேல் காலம், நேரம் கருதி வெளியிட வேண்டும்” என்று கூறினார்.

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.சபரிராஜ் கூறுகையில், “ஆசிரியர்கள் ஏற்கெனவே தங்கள் சொத்துக் கணக்குகளை தெரிவித்துவருகின்றனர். முறையாக வரி செலுத்திவருகின்றனர். இதற்கு காரணம் அரசு ஆசிரியர்களை அரசுக்கு எதிரானவர்களாகக் கருதுவதால் இதுபோன்ற மிரட்டு அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆசிரியர்கள் அரசுக்கு எதிரானவர்கள் இல்லை. பள்ளிகள் இணைப்பு, நீட் தேர்வு போன்ற அரசு பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பணி, அரசு பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத்தான் ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

அரசின் அறிவிப்பால், ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்கின்ற ஆசிரியர்களை இப்படி சமூகத்தின் முன்பு குற்றம்சாட்டுவது போல அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது வேதனையானது. இது ஆசிரியர்களின் நேர்மையை அவர்களின் ஒழுங்கை அவமதிப்பது போல உள்ளது. கண்டிக்கத் தக்கது.” என்று கூறினார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் சொத்துக்கணக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒன்றை நாளை ஆசிரியர் தினம் கொண்டாட உள்ள நிலையில் ஆசிரியர்களை குற்றம் சாட்டுவது போலவும், அவர்களை அவமதிப்பது போலவும் அறிவித்திருப்பதுதான் ஆசிரியர் தின பரிசா என்று ஆசிரியர்கள் பலரும் தங்கள் மனஉளைச்சலை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent