ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்தபடி, மாவட்ட தலைநகரங்களில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, புதிய கல்விக் கொள்கையில் உரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், நடுநிலைப் பள்ளிகளை ஒன்றாக இணைத்து அவற்றை அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், 17பி நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும், பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணியிட மாறுதல்களை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் முன் வைக்கப்பட்டன.
மேலும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 6ம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் இடம் பெற்ற அநாகரீகமான கேள்விகளில் அம்பேத்கர் எந்த வகுப்பை சேர்ந்தவர், முஸ்லிம் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதது, தலித் என்றால் என்ன, தலித் லீடர் யார் என்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இது தலித் மக்கள், முஸ்லிம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. சாதிய வன்மத்தோடு தயாரித்து இருக்கிறார்கள். எனவே இந்த வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் குழுவினர் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக