இந்த வலைப்பதிவில் தேடு

தாக்கப்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் - என்ன செய்ய போகிறது தமிழக அரசு? சமூக ஆர்வலர்கள் கேள்வி

ஞாயிறு, 13 அக்டோபர், 2019



வகுப்பறைகளில் சினிமா பாணியில் நுழையும் மாணவர்களின் நடை, உடை, தோற்ற பாவனைகள் தமிழகத்தின் எதிர்காலத்தை எங்கே அழைத்து செல்கிறது என்ற கேள்வியே சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தமிழகத்தில் 23,928 அரசு ஆரம்பப்பள்ளிகளும், 7,260 நடுநிலைப் பள்ளிகளும், 3,044 உயர்நிலைப்பள்ளிகளும், 2,727 மேனிலைப்பள்ளிகளும் உள்ளன. இதில், 64,855 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், 50,508 நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், 27,891 உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும், 73,616 மேனிலைப்பள்ளி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். அரசு பள்ளிகளில் 56,55,628 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், நாகரீக வளர்ச்சியின் காரணமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் திசைமாறி கிடக்கின்றனர். ஆள் பாதி, ஆடை பாதி என்கிற பழமொழிக்கு ஏற்றார்போல் மாணவர்களின் செயல்பாடுகள் வேறு மாதிரியான சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கண், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால் கவனச் சிதறல் ஏற்பட்டு கல்வியில் பின்தங்கி, வாழ்க்கையை தொலைத்து மனம்போன போக்கில் சுற்றித்திரிகின்றனர். 

மாணவர்கள் மீது அக்கறை கொள்ளும் சில ஆசிரியர்கள் அதனை கண்டித்தால் தாக்கப்படுகின்றனர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பயந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டு பயந்து ஒதுங்கும் காலம் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். தலைமுடியை கண்டபடி வெட்டிக்கொள்வது, நீளமாக வளர்ப்பது, கலர்களால் அலங்கரிப்பது, ஆடைகளை இறுக்கமாக அணிவது, லோ ஹிப் பேண்ட் அணிவது, கை கால்களில் கயிறு, கைக்குட்டை கட்டிக்கொள்வது என்று நாகரீகம் என்கிற பெயரில் இவர்கள் செய்யும் அநாகரீக செயல்களுக்கு முடிவேயில்லாமல் உள்ளது.


நடந்து சென்ற காலம் மாறி, தற்போது பள்ளிக்கு பைக்குகளில் மாணவர்கள் வந்து செல்கின்றனர். மேலும், ஜாதிய பாகுபாடுகளை உருவாக்கி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய காரணங்களால் மறைமுகமாக அவர்களாகவே எதிர்காலத்தை இருண்ட காலமாக மாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், மாணவர்கள் ஒழுக்க விதிகளை மீறுவதை தடுக்கும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான 11 ஒழுக்க விதிகள் வரையறுக்கப்பட்டது. காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும். லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது. மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும். கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும். மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும். கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கண், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது. பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.

பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும். இவை மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது. பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 11 ஒழுக்க விதிகளை வகுத்தது. ஆனால் அதனை முறையாக செயல்படுத்துவதில் பள்ளிக்கல்வித்துறை தோல்வியடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நற்பண்புகளுடன் இன்றைக்கு அரசின் உயர் பொறுப்புகள் வகிக்கும் பலரின் வாழ்க்கை நிலையை உயர்த்திய பெருமை அரசு பள்ளிகளை சேரும். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய அரசு பள்ளிகள் இன்றைக்கு பொலிவிழந்து காணப்படுகிறது. படிக்க வேண்டும் என்று அரசு பள்ளியில் சேர்ந்த காலம் மாறி குடும்ப வறுமை நிலை, பொழுதுபோக்கு போன்ற காரணங்களுக்காக அரசு பள்ளிக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


பழைய பாடதிட்டங்களை மாற்றி இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றார்போல் பாடத்திட்டங்களை மாற்ற தீவிரம் காட்டும் தமிழக அரசு, ஏனோ மாணவர் ஒழுக்க நலன் சார்ந்த நடவடிக்கைகளை கண்டும் காணாமலே உள்ளது.

இதனால் கேட்கவும், கண்டிக்கவும் யாரும் இல்லை, என்ற நிலையில் மாணவர்கள் ஒழுக்க விதிகளை மீறி செயல்படுகின்றனர். இந்த அவல நிலையை மாற்றாவிட்டால் அரசு பள்ளிகள் எதற்கு? என்ற கேள்வி எழும். அரசுப்பள்ளிகளின் இத்தகைய அவல நிலையால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பொருளாதார நெருக்கடிகளையும் கடந்து தங்களது பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்து ஒழுக்கமாக வளர்ந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று துடிக்கின்றனர். அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள் பெற்றோர்களின் கவலையில் காசு சம்பாதிக்கின்றனர். 

இந்த நிலையை அரசு பள்ளிக்கல்வித்துறை மாற்ற தீவிரமாக அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும். ஏதோ அரசு பள்ளிக்கு மாணவர்கள் வந்தார்கள், சென்றார்கள் என்கிற நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள் என்று உரக்கச் சொல்லும் நிலையை அரசு பள்ளி கல்வித்துறை உருவாக்க வேண்டும். மாணவர்கள் ஒழுக்க விதிகளை கடைபிடிப்பது அவர்களது வாழ்வுக்கான வளம் மட்டுமல்ல இந்த சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியம் என்பதை அறிந்து தமிழக அரசு உடனடியாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் செயல்பாட்டில் புதிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்’ என்றனர்.

1 கருத்து

  1. Arasu pallikalil padithavarkal indtru pala duraikalil nalla mukkiya pathavil ullanar appothellam teachers kattupatil manavarkal paditharkal anal ippo manavarkal teachers sa mirattukirarkal sathi sinthanai manavarkalidam uruvakivittadu athanal manavarkal teachers kittavum piramanavarkittyum mothalai undakkurarkal arasu udanadiyaka nadavadikkai edukkavittal manavarkal life? THAN

    பதிலளிநீக்கு

 

Recent