வங்கிகளிடமிருந்து மக்கள் கடன் வாங்குவது போல, வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்குகின்றன. அந்தக் கடன் தொகைக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டிதான் 'ரெப்போ வட்டி விகிதம்’. ரிசர்வ் வங்கி தன்னிடம் கடன் வாங்கும் வங்கிகளுக்கு வட்டியைக் குறைக்கும் போது, அதனால் பலன் பெறும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் வாங்கிய கடன்களின் வட்டிகளைக் குறைக்க வேண்டியது அவசியம்.
அமலுக்கு வரும் ஆர்.பி.ஐ. அறிவிப்பு!
ஆனால், ரெப்போ வட்டி விகிதத்தைக் கடந்த பிப்ரவரி 2019-லிருந்து 1.10% குறைத்தும், வங்கிகள் பல்வேறு கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் இருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், வங்கிக் கடன்களுக்கான வட்டியைக் குறைக்கச் சொல்லியும், பெரும்பாலான வங்கிகள் அதை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றன. இதனால் ரிசர்வ் வங்கி, அதிரடியான சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்புகள் வருகிற அக்டோபர் மாதம் 1-ம் தேதியிலிருந்து அமலுக்கு வரவிருக்கின்றன.
அன்று முதல் தனிநபர் கடன் மற்றும் சிறு கடன்களுக்கான வட்டி (வீட்டுக்கடன் மற்றும் கார் கடன் முதலானவை), சிறு, குறு தொழில்முனைவோர் கடன்களுக்கான வட்டி ஆகியவை பொதுவான அளவுகோலின்படி நிர்ணயிக்கப்பட வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது வங்கிகள் ரெப்போ விகிதம், மூன்று மாத அல்லது ஆறு மாத ட்ரெஷரி பில் வருமானத்தின் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும். இதனால் வட்டி விகிதம் குறையும்.
கவனித்து கடன் வாங்குங்கள்!
வட்டி விகிதம் குறைவு ஒரு பக்கம் மகிழ்ச்சியான செய்தி என்றாலும், கடன் வாங்குவோர் ஒருசில விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டியது அவசியம். தற்போது வரை அனைத்து வங்கிகளும் எம்.சி.எல்.ஆர் (Marginal Cost of funds based Lending Rate) அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கின்றன. அதாவது தங்களின் வைப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் செலவு எவ்வளவு என்பதன் அடிப்படையில்தான் வட்டிவிகிதத்தை நிர்ணயித்து வருகின்றன. இந்த எம்.சி.எல்.ஆர் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அதனால், வட்டிவிகிதமும் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுகிறது. இதனால், ரெப்போ வட்டி விகித மாற்றத்தின் பலன் மக்களுக்குக் கிடைப்பது மிக மிகக் குறைவாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பொதுவான ஓர் அளவுகோளின்படி வட்டி விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றம் வங்கிகளின் வட்டிவிகிதத்திலும் கணிசமாகப் பிரதிபலிக்கும். உதாரணத்துக்கு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.35 சதவிகிதத்தைக் குறைத்தால், வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.35% குறைக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால் கடனுக்கான வட்டியும் உயரும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை!
ஒரு வருட எம்.சி.எல்.ஆர் அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்பட்டால், வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்கப்படும். ஆனால், பொது அளவுகோளின்படி வட்டி நிர்ணயம் செய்யும் முறையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், மாத தவணையிலும் மாற்றங்கள் இருக்கும். வழக்கமான எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் மாத தவணை நிலையாக இருக்கும். ஏனெனில், வங்கிகள் மாத தவணையில் மாற்றங்கள் செய்யாமல், கடனைத் திரும்பச் செலுத்தும் கால அளவில் மாற்றங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. நீங்கள் கோரிக்கை செய்தால் மட்டுமே அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும்.
ஆனால், ரெப்போ விகிதத்தின் அடிப்படையிலான வட்டி விகித முறையில் ஒவ்வொரு மாதத்துக்கான வட்டியும் கணக்கிடப் பட்டு வசூலிக்கப்படும். எனவே, ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாத தவணை மாறும். எம்.சி.எல்.ஆர் அடிப்படையிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள் தங்களின் கடனை பொது அளவுகோலின் படியான வட்டி விகிதங்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லாமல் ஒரு வங்கியிலிருந்து, மற்றொரு வங்கிக்கு மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக