இந்த வழக்கின் தீர்ப்பைத் தெரிந்து கொள்வதற்கு இந்திய மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, காலை 10.30 மணியளவில் தீர்ப்பளிக்கவுள்ளது.
தீர்ப்பு வெளியாவதை ஒட்டி, இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அயோத்தி உள்பட உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் 4,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆளில்லா உளவு விமானங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலர் ராஜேந்திரகுமார் திவாரி, பொலிஸ் உயர் அதிகாரி ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உச்சநீதிமன்றத்திலுள்ள தனது அறைக்கு வெள்ளிக்கிழமை அழைத்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, உத்தரப் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை ஆணையர்கள், நிர்வாக அதிகாரிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் காணொலி முறையில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அயோத்தி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழ்ந்தால், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, 2 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதன்படி, அயோத்தியில் ஒரு ஹெலிகாப்டரும், லக்னௌவில் ஒரு ஹெலிகாப்டரும் தயார்நிலையில் வைக்கப்பட உள்ளன. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றிலும் பல மைல் தொலைவுக்கு வௌ;வேறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 700 அரசு பள்ளிகளிலும், 50 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 25 சிபிஎஸ் பள்ளிகளிலும் பாதுகாப்பு படையினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிக்க மாவட்டந்தோறும் கட்டுப்பாட்டு அறைகளும், தலைநகர் லக்னௌவில் முதன்மை கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளன. இதேபோல், சமூக ஊடகங்களில் பதற்றத்தை உருவாக்கும் தகவல்கள் பரப்பப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கு பொலிஸ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு வெளியாவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் திங்கள்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா ஆகிய தேசியத் தலைநகர் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இறுதிவாதங்கள் நிறைவடைந்து தீர்ப்பு நாள் நெருங்க நெருங்க, முன்னெச்சரிக்கையாக பல்வேறு உத்தரவுகள் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கு முன்னெசரிக்கையுடன் செயல்படுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய அரசாங்கம் வலியுறுத்தியது. பதற்றத்தை உருவாக்கும் வகையில் விவாதங்களை நடத்த வேண்டாம் என்று தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது..
மற்றொரு புறம், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தொடர்பாக பிரசினை ஏற்படுத்தும் வகையிலோ, உணர்ச்சிபூர்வமாகவோ எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என நிர்வாகிகளையும், செய்தித் தொடர்பாளர்களையும் பாஜக தலைமை அறிவுறுத்தியது. தேவையற்ற கருத்துகள் வெளியிடுவதை தவிர்க்கும்படி இந்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்தினார்.
இதனிடையே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனவும் பல்வேறு ஹிந்து, முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தின.
வழக்கின் பின்னணி:
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவார்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபர் 17-ஆம் திகதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 40 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபர் 16-ஆம் திகதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன.
அன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீர்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதைத் தொடர்ந்து, சன்னி வக்ஃபு வாரியம் சில நிபந்தனைகளின் பேரில், நிலத்தின் மீது உரிமைகோருவதை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகின. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பர் 17-ஆம் திகதியுடன் ஓய்வுபெறுகிறார். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது.
அமைதி காக்கவும்: மோடி வேண்டுகோள்
அயோத்தி வழக்கின் தீர்ப்பை எந்தவொரு சமூகத்தின் வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுதொடா்பாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
பல்வேறு சமூகத்தினரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
வழக்கின் தீர்ப்பை எந்தவொரு சமூகத்தின் வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் என்ற இந்தியாவின் மாபெரும் பாரம்பரியத்தை வலுப்படுத்துவதில் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக