இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிக்கல்வி துறை ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்?

வெள்ளி, 22 நவம்பர், 2019



தமிழக பள்ளிக்கல்வி துறை ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்படுவதாக கடந்த 14-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பதவி புதிதாக ஏற்படுத்தப்பட்டது ஆகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட சிஜி தாமஸ் வைத்யன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் பள்ளிக்கல்வி துறை ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு கல்வித்துறை இயக்குநர்கள், அதிகாரிகள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பள்ளிக்கல்வி துறையின் புதிய ஆணையருக்கான அறை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்தபடி, ஆணையர் பணிகளை மேற்கொள்ள உள்ளார். டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வி துறைக்கு என்று புதிதாக அலுவலகங்கள் வர உள்ளன. அதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிந்ததும், அதில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

உருவாக்கப்பட்டது ஏன்?

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாட்டை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் இனி அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் பள்ளிக்கல்வி துறை ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜி தாமஸ் வைத்யன் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுவார். பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம், மெட்ரிகுலேசன் பள்ளி இயக்ககம், அரசு தேர்வுத்துறை இயக்ககத்தை ஒருங்கிணைத்து, சீரான நிர்வாகத்தை வழங்க அவர் முயற்சி மேற்கொள்வார்.

பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறையின் திட்டங்களை களத்துக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதும் ஆணையரின் செயல்பாடுகள் ஆகும். பள்ளிக்கல்வி துறையில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மேல்முறையீடு ஆகியவையும் இனி ஆணையரின் சார்பாகவே மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent