இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை கட்டாயமாகிறது

வெள்ளி, 22 நவம்பர், 2019

.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த பயோமெட்ரிக் கருவி முறையிலான வருகை பதிவேடு முறை கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்தது. 


தொடர்ந்து, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் குறித்த நேரத்துக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால், அன்று அவர்களுக்கு விடுப்பு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன்கூட்டியே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணி நேரத்தை கணக்கிடுவதற்காக கியூஆர் பார் கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு, சுய விவரங்களோடு, புகைப்படம் மற்றும் கியூஆர் பார் கோடு இணைக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டது.


இதேபோல் ஆசிரியர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. எமிஸ் இணையதளத்தில், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் புதிய புகைப்படம் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களது சுய விவரங்களை பூர்த்தி செய்து வரும் 25ம் தேதிக்குள் இயக்குனரகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்விதுறை இயக்குநர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்பணி தாமதமானால், முதன்மை கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent