இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியையை கத்தியால் குத்த முயன்ற சத்துணவு ஊழியர்

ஞாயிறு, 10 நவம்பர், 2019



தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே மந்திகுளத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக சண்முகலட்சுமியும், ஆசிரியையாக கலைச்செல்வியும் பணியாற்றி வருகின்றனர்.  இங்கு 11 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சத்துணவு சமையல் ஊழியராக இருப்பவர் மீனாட்சி. இவரை யாராவது குறை கூறினாலும் பிடிக்காது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் கல்வித்துறை உயரதிகாரிகள், இப்பள்ளியில் ஆய்வு நடத்தினர். பள்ளி அருகே சமையலறையையும்  பார்வையிட்டனர். அங்கு உணவுப்பொருட்கள் சுத்தமாக இல்லையென மீனாட்சியை கண்டித்துள்ளனர். இதற்கு தலைமை ஆசிரியை சண்முகலட்சுமியும், ஆசிரியை கலைச்செல்வியும்தான் காரணமென நினைத்து அவர்களிடம் மீனாட்சி  வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

நேற்று காலை கலைச்செல்வி வகுப்பறையில் இருந்தபோது அங்கு வந்த மீனாட்சி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை தாக்க முயன்றுள்ளார். இதனால் பதறியடித்து ஓடிய அவர், மற்றொரு அறைக்கு சென்று கதவை பூட்டிக்  கொண்டார். இதனால் ஆவேசமடைந்த மீனாட்சி, வெளியே நிறுத்தியிருந்த அவரது மொபட் மீது கற்களை தூக்கிப்போட்டு சேதப்படுத்தினார். 

மேலும் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து பள்ளி முன்பு நின்று ஆசிரியை கலைச்செல்வியை  வெளியே வருமாறு அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சம்பவம் குறித்து ஆசிரியை கலைச்செல்வி, செல்போன் மூலம் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரை கண்டதும் மீனாட்சி  தப்பியோடி விட்டார்.  இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மீனாட்சியை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent