இந்த வலைப்பதிவில் தேடு

அசத்தும் 21 பேர் கொண்ட பேர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு

புதன், 18 டிசம்பர், 2019



கரங்கள் கோர்ப்போம், கலைகள் காப்போம்" என்கிற முழக்கத்தோடு பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கலைக்குழு தொடங்கப்பட்டுள்ளது.



ராமராதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் கரிசல் கலைமுருகன் ஒருங்கிணைப்பில் காஞ்சிபுரம் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியை யுவராணி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் கலை ஆர்வம் மிக்க 21 ஆசிரியர்களைக் கொண்ட கலைக் குழுவாக உருவாகியுள்ளது.




இவர்கள், தமிழர்களின் பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், கோலாட்டம், சாட்டைக்குச்சி, தேவராட்டம், படுகர் ஆட்டம், குரும்பர் ஆட்டம், வேடர் ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் ஆட்டம், பறையிசை உள்ளிட்ட 14 வகையான பாரம்பரிய கலைகளைக் கற்றுள்ளனர்.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை பல்வேறு கட்ட பயிற்சிக்கு பிறகு அரங்கேற்றத்திற்காக காத்திருக்கின்றனர்.

கலைக்கான பயிற்சியால் கற்பித்தல் பணி பாதிக்கப்படாத வகையில் தேர்வு விடுமுறை, அரசு விடுமுறை நாட்களை முன்கூட்டியே திட்டமிட்டு, அனைவரும் சொந்த செலவில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே கொளக்குடிப்பட்டியில் உள்ள கிராமாலயா தொண்டு நிறுவனத்தில் இப்பயிற்சியை மேற்கொண்டனர்.



இப்பயிற்சியை ஒருங்கிணைத்துள்ள கரிசல் கலைமுருகன் செய்திக்கு அளித்த பேட்டியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எங்களை இந்த கலைதான் இணைத்துள்ளது.




சிறு வயது முதல் நாட்டுப்புறக் கலைகள் மீது எனக்கு தனி ஈர்ப்பு. ஆகையால், ஆதரவின்றி அழியும் நிலையில் உள்ள நம் பாரம்பரிய கலைகளை மீட்டு, காப்பாற்றி, மாணவர்களாக உள்ள இளம் தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

இதற்கு செயல் வடிவம் கொடுக்க விரும்புவோர் வாருங்கள் கரம் கோர்ப்போம் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் முகநூலில் அழைப்பு விடுத்தேன்.



இதைப்பார்த்து 140 பேர் விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களில் 45 பேர் நேரடி அறிமுகக் கூட்டத்திற்கு வந்தனர். கடுமையான பயிற்சி, பொருட் செலவுகளைக் கடந்து தற்போது 11 ஆசிரியைகள் உள்ளிட்ட 21 பேர் கொண்ட குழுவாக உருவெடுத்துள்ளது.

மேலும், இந்திய அளவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்ட முதல் கலைக்குழுவும் இதுதான். இந்த பெருமையோடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்ய விரும்புகிறோம் என்கிறார்.





நம் வாழ்வியலோடு தொடர்புடைய பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளைக் காத்து, விடுமுறை தவிர்த்து, சொந்த செலவில் திருச்சியில் கூடி, பயிற்சி பெற்று, அரங்கேற்றத்திற்கு காத்திருக்கும் இவர்களின் முன்மாதிரி முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த கலைக்குழுவை பள்ளிக் கல்வித்துறை அங்கீகரித்து, உதவ வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent