இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களின் சிகை அலங்காரம் விழிப்புணர்வு - தலைமையாசிரியர் 700 கி.மீ., இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம்

வியாழன், 12 டிசம்பர், 2019



நாகையில், பள்ளி தலைமையாசிரியர் ஒருவர், இருசக்கர வாகனத்தில், 700 கி.மீ., பயணம் செய்து, பள்ளி மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வது குறித்து, முடி திருத்துவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.


நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், ஞானாம்பிகா அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில், தலைமையாசிரியராக பணியாற்றுபவர் சித்திரவேலு, 55. மாணவர்கள் ஒழுங்கின்றி, விதவிதமான சிகை அலங்காரத்தில் பள்ளிக்கு செல்வதை பார்த்து வேதனைப்பட்டுள்ளார்.இது குறித்து, மாணவர்களுக்கு அறிவுரை கூறுவதைவிட, சிகை அலங்காரம் செய்பவர்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, அவர் முடிவு செய்தார்.


இதற்காக, நவ., 23ம் தேதி, தன் இருசக்கர வாகனத்தில், விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில், 700 கி.மீ., பயணம் செய்து, 69 கிராமங்களில், 179 சிகை அலங்கார கடைகள் மற்றும் கிராமங்களில் முடி திருத்தும் நபர்கள், 75 பேரை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கடந்த, 8ம் தேதி, தன், 15 நாட்கள் பயணத்தை நிறைவு செய்தார்.நேற்று முன்தினம் மாலை, வேதாரண்யம், ஓய்வூதியர் சங்க கட்டடத்தில், சிகை அலங்கார நிபுணர்களை ஒருங்கிணைத்து, கூட்டம் நடத்தினார்.'மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் தலையில், 'பாக்ஸ் கட்டிங், ஒன்சைடு, வி கட், ஸ்பைக்' போன்ற சிகை அலங்காரங்களை தவிர்ப்போம்.'பள்ளி சூழலுக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்வோம்' என, அவர்கள் உறுதிமொழியேற்றனர்.

சித்திரவேலுவின் சமூக பொறுப்புணர்வு, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இவரை பாராட்ட விரும்புவோர், 9965897939 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent