மேலும்,அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கணித ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழக கல்வித்துறையில், நாள்தோறும் ஒரு அறிவிப்பு என்ற அடிப்படையில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத மற்றும் தேவையற்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தற்போது பிஇ முடித்தவர்கள்,பிஎட் படித்தால் 6 முதல் 8ம் வகுப்பு வரை கணித பாடம் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
பொதுவாக, பிஎஸ்சி கணிதம் படிப்பவர்கள் 3 ஆண்டுகளில் சுமார் 20க்கும் அதிகமாக பாடங்களில் தனித்தனியாக கணிதத்தை படிக்க வேண்டும்.அதில்,அடிப்படை கணக்குகள்,சூத்திர விளக்கங்கள், நடைமுறை கணக்குகள் போன்ற பல்வேறு பிரிவுகளை,உள்ளார்ந்து புரிந்து கொண்டுதான் தேர்வு எழுத வேண்டும். ஆனால், பிஇ படிப்பவர்கள் முதல் 2 வருடத்திற்கு, 4 செமஸ்டர் மட்டுமே கணிதத்தை ஒரு பாடமாக படித்து தேர்வு எழுதுவார்கள்.
அதில்,பாடத்திற்கு ஏற்றவாறு, மேலோட்டமாக மட்டும் சில கணக்குகளை மனப்பாடம் செய்தால் போதுமானது.குறிப்பாக,பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் வானவியல், நிகழ்தகவு, லாப,நஷ்ட கணக்கு போன்ற எதுவும் இருக்காது.இவர்களால் எப்படி மாணவர்களுக்கு கணித பாடத்தை நடத்த முடியும். தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை என ஒன்றும் இல்லை. இதனால்,கடந்த சில ஆண்டுகளாக பிஎட் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துவிட்டது.
அந்த வகையில், தனியார் பிஎட் கல்லூரிகளில் மாணவர் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. மேலும், தேர்தலை கருத்தில் கொண்டு,பிஇ முடித்துள்ள இளைஞர்களை கவர இத்தகைய அறிவிப்பு வெளியிட்டிருக்க வாய்ப்பும் உள்ளது.
இளைஞர்களை கவர வேண்டுமென்றால்,அவர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதனை விடுத்து,இதுபோன்ற ஒரு உள்நோக்கத்துடன் கூடிய அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே, பிஎஸ்சி கணிதம் படித்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு,இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வேலைவாய்ப்புக்கு சாத்தியமில்லை
தமிழகம் முழுவதும் உபரியாக உள்ள 12,000 ஆசிரியர்களில், பட்டதாரி கணித ஆசிரியர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும். இதுவரை நடந்துள்ள ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10,000 பேர் வரை காத்திருப்பில் உள்ளனர். இதுதவிர பிஎஸ்சி.,பிஎட்.,முடித்து தனியார் பள்ளிகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அடுத்து, பிஎஸ்சி கணிதம் முடித்து, தற்போது 5,000 பேர் வரை பிஎட் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசுப்பணி கிடைக்குமா? கிடைக்காதா? என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர் பிஇ முடித்து வெளியே வருகின்றனர். இவர்களில் 10% பேர் பிஎட் படித்தால் கூட, அவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது கானல் நீராகவே இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக