இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச புது உத்தியையே உருவாக்கிய ஆசிரியர் - சிவக்குமார்!

வியாழன், 19 டிசம்பர், 2019


உலகில் மொழியை விடச் சிறந்த கண்டுபிடிப்பு வேறு இல்லை என்பார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். பேச்சே ஓர் ஆயுதம்தான். இன்றளவும் தமிழ்வழிக் கல்வியில் படித்து, முழுமையாகப் புரிந்தாலும் ஆங்கிலத்திலேயே தொடர்ச்சியாகப் பேச முடியாமல் சிரமப்படுவர்கள் ஏராளம். அதுவே அவர்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லாமல் இருப்பதையும் காண முடிகிறது.


ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் அச்சம் தவிர்த்து, கூச்சம் போக்கி, அவர்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வைக்கிறார் அன்பாசிரியர் சிவக்குமார். இதற்கு Tri -Verb Technique என்ற புதிய உத்தியையும் கையாள்கிறார். அவரின் உத்தி, சிறப்பாக உள்ளதை அறிந்த ஆசிரியர்கள் சிலர், சிவக்குமாரின் வகுப்புக்கே நேரடியாக வந்து அவற்றைக் கற்றுச் சென்றிருக்கின்றனர். 15-க்கும் மேற்பட்ட பள்ளிகள், தங்களின் வகுப்பறைகளில் அவரின் உத்தியைக் கையாண்டு ஆங்கிலம் கற்பிக்கின்றன.



தன்னுடைய ஆங்கில அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சிவக்குமார். ''சேலம் அருகே மேட்டுப்பட்டி அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன். அப்போதெல்லாம் வழிகாட்டலுக்கு ஆட்கள் இல்லை. என்ன படிப்பதென்றே தெரியாமல் எம்.ஏ. ஆங்கிலம் முடித்தேன். தமிழ்வழிக் கல்வியில் படித்த எனக்கு, கல்லூரியில் முழுவதும் ஆங்கிலத்திலேயே படிப்பது கடும் சிரமத்தைக் கொடுத்தது. தட்டுத்தடுமாறி தேர்வுகளை முடித்தேன். கட்டுரை, கவிதை, நாவல்களைத் தடுமாற்றமின்றி எழுத ஆரம்பித்தேன். நிறைய ஆங்கிலச் சொற்களைக் கற்றுக்கொண்டேன்.


சொந்தமாகவே ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆனாலும் பேசுவதில் தடை, தயக்கம், பயம் இருந்தது. 2004-06 வரை தனியார் பள்ளியில் பணிபுரிந்தேன். கடின உழைப்பு, முன் தயாரிப்பு ஆகியவற்றால் ஓரளவு சரளமாகப் பேச ஆரம்பித்தேன். 2007-ல், சேலம் மாவட்டத்திலேயே, சந்திரப்பிள்ளை வலசு என்னும் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசுப் பணி கிடைத்தது.




மொழிப்புலமைக்கு என்ன செய்யலாம்?
ஆங்கிலத்தில் பேச நான் பட்ட கஷ்டத்தை மாணவர்கள் பெறக்கூடாது என்று முடிவெடுத்தேன். ஓய்வு நேரங்களில் ஆங்கில மொழி குறித்த ஆய்வில் இறங்கினேன். பொதுவாக ஒரு மொழியில் புலமை பெற, முதலாவது அதன் சொற்களில் தேர்ச்சி பெற வேண்டும், இரண்டாவது அது என்ன சொல்ல வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


பள்ளிகளில் ஆங்கிலப் பாட வகுப்புகளில் அவற்றை அப்படியே தமிழுக்கு மொழிபெயர்த்து சொல்லிக் கொடுக்கின்றனர். பாடங்களை மனனம் செய்ய வைக்கின்றனர். இதனால் ஆங்கில அறிவோ, பேசும் திறனோ அதிகம் வளர்வதில்லை என்பது புரிந்தது.

பொதுவாக ஒரு குழந்தை, வளர்பருவத்தின் ஆரம்பத்தில் சில சொற்களைச் சொல்லும், வாக்கியமாகப் பேசும். வாக்கிய அமைப்பை உருவாக்கும். பதில் சொல்லும், கேள்வி கேட்கும். அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு நுட்பத்தை உருவாக்கினேன். மாணவர்களை அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளை வாசிக்க வைப்பதில் ஆர்வம் காட்டாமல், ஆங்கில உரையாடலை வளர்க்க முடிவெடுத்தேன். இரண்டு ஆண்டுகள் செலவிட்டு, இதற்காக Tri -Verb Technique என்னும் நுட்பத்தை 2012-ல் உருவாக்கினேன்'' என்கிறார் அன்பாசிரியர் சிவக்குமார்.



இதில் இலக்கணம், செயல் நடைபெறும் காலம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல் 3 வாக்கிய அமைப்புகளை உருவாக்கிய அவர், சிறுவர்கள் தங்களை அறியாமலே அடிக்கடி பேசும் 100 வார்த்தைகளை எடுத்துக்கொண்டதாகத் தெரிவிக்கிறார்.

''பெரும்பாலும் ஒரு மொழி பின்வரும் 3 வகைப்பாட்டுக்குள் அடங்கிவிடும்.
வினைச்சொற்கள் (Action Verb)
வைத்திருத்தல் சொற்கள் (Possession verb)
தன்மைச் சொற்கள் (Be verb).


லட்சக்கணக்கான வாக்கிய அமைப்புகள் இந்த மூன்றில் இருந்தே உருவாகின்றன. அவற்றைக் கொண்டு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிவிடுவேன். அதில் இருந்து நிகழ்வுகளை எடுத்துச் சொல்வேன். படங்களுடன் அவற்றைக் கற்பிக்கும்போது மாணவர்கள் எளிதில் கிரகித்துக் கொள்கின்றனர்.

உதாரணத்துக்கு ஆசிரியர், சிறுமி நிற்பது, ஆசிரியர் கை கொடுப்பது ஆகிய 3 படங்களை ப்ரிண்ட் எடுத்துக்கொள்வேன். அதில், Teacher + Girl + Teacher என்பதற்கு Ask + tell + appreciate ஆகிய வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பேன். அவற்றைக் கொண்டு, மாணவர்களே நிகழ்வைக் கோத்து, ஒரு சம்பவமாகச் சொல்வர். Teacher asks the girl, she tells anwser and teacher appreciates her என்று சொல்வர். இதேபோல 150 நிகழ்வுகளை ப்ரிண்ட் எடுத்து, மாணவர்களிடம் கொடுத்துப் பயிற்சி அளிக்கிறேன்.


இதில் மொழிதான் முதலில் முக்கியம் என்பதால் எல்லாவற்றையும் நிகழ்காலத்திலேயே கற்பிக்கிறேன். இதன்மூலம் எளிதாக சம்பவங்களைப் புரிந்துகொள்ளும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கின்றனர்.



அடுத்ததாக ஒரு பொருள், துறை குறித்து விளக்கமாகப் பேசுவது.. (Describing an object)

என்ன அது, அதனால் என்ன பயன், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து 5 வாக்கியங்களை எழுதி, பிரிண்ட் எடுத்து மாணவர்களிடம் கொடுத்துவிடுவேன். உதாரணத்துக்கு மருத்துவர் என்னும் துறையில் அவர் யார், என்ன செய்வார், அவரால் என்ன பயன் என்பது போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும். பறவைகள், பழங்கள், வாகனங்கள், முக்கிய தினங்கள் என சுமார் 100 பொருட்கள் குறித்துக் கூறப்படும்.

இதற்காக மொழி ஆய்வகத்தையும் எளிமையான முறையில் நிறுவியுள்ளேன். வசீகரிக்கும் வண்ண பெயிண்ட் அடித்து, ஏ3 வடிவில் நிகழ்வுகளை பிரிண்ட் அவுட் எடுத்து 8-ம் வகுப்பு சுவர்களில் ஒட்டினேன். மேற்கூரையில் விளக்குகள், எலக்ட்ரிகல் வேலை, பிரிண்ட்டர் ஆகியவற்றைச் சொந்த செலவிலேயே செய்ததில் கூடுதல் மகிழ்ச்சி.



ஒரு மொழியைப் பேச 2 விஷயங்கள் அடிப்படைத் தேவை

1. ஒரு நிகழ்வு
2. அதை இடம், பொருள், நிலை கொண்டு விளக்குவது
இவற்றை ஆரம்பத்திலேயே விளக்கிவிடுவதால், எங்களின் மாணவன் எந்த டாபிக் கொடுத்தாலும் அதுகுறித்துப் பேசுவான் ''என்கிறார் அன்பாசிரியர் சிவக்குமார்.

உரையாடல்கள் அனைத்துமே நிகழ்காலத்தில் இருப்பதால், மற்ற காலங்களில் பேசக் கற்பது எப்படி? மொழி இலக்கணம் எப்போது வளரும்? என்று கேட்டதற்கு, ''உரையாடுவதற்கு இலக்கணம் அத்தியாவசியமில்லை. மொழித்திறனே முக்கியம். அது அதிகரிக்கும்போது இலக்கணமும் தானாய் வளரும்'' என்கிறார்.

மொழித்திறனால் எளிதாகும் பாடங்கள்

சிறப்புப் பயிற்சிகளால் வழக்கமான ஆங்கிலப் பாடம் எடுப்பது பாதிக்கப்படாதா? என்று கேட்டால், ''மொழித்திறன் இருப்பதால் பாடங்களை மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்கின்றனர். நேரத்தை மிச்சப்படுத்த, பாடத்துக்குப் பின்னால் உள்ள பயிற்சிகளை வீட்டுப் பாடமாகக் கொடுத்துவிடுவேன். தினந்தோறும் யாராவது சில மாணவர்களைக் கூப்பிட்டு கரும்பலகையில் அவற்றை எழுதச் சொல்லிப் பரிசோதித்துவிடுவேன்.




தினந்தோறும் மாணவர்களை பெரிய சைஸ் நோட்டில், அரைப்பக்கத்துக்கு ஆங்கிலச் செய்தித்தாள் செய்தியை வெட்டி, ஒட்டச் சொல்வேன். மீதமுள்ள அரைப்பக்கத்தில் அந்தச் செய்தியில் தெரியும் வார்த்தைகளை எழுதி வரவேண்டும். 2,3,4 எழுத்துச் சொற்களுக்கு அனுமதியில்லை. குறைந்தது 5 எழுத்துகளைக் கொண்ட சொற்களையே எழுத வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்குப் புதிய ஆங்கில வார்த்தைகள் அறிமுகம் ஆகின்றன.






ஆக்கபூர்வ படைப்பாற்றல்

சரியா, தவறோ பண்டிகைகளின்போது 8-ம் வகுப்பு மாணவர்களை 2 பக்கங்களுக்குக் கட்டுரை எழுதச் சொல்வேன். சமீபத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி குறித்து என் மாணவர்கள் 2 பக்கத்துக்குக் கட்டுரை எழுதினர். அதில் 8 மாணவர்களின் கட்டுரை சிறப்பாக இருந்தது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பள்ளியில் மாணவர்களுக்கு தனித்திறன் பயிற்சி நடக்கும். அதில் ஆங்கிலத்தில் நகைச்சுவை, நாடகங்கள் ஆகியவற்றையும் அரங்கேற்றுகிறோம். இதுபோக ஆங்கில வகுப்புக்கு வரும் ஒவ்வொரு மாணவரும் தினந்தோறும் ஒரு நிகழ்வைக் கட்டாயம் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.


ஆங்கில உரையாடலை மேலும் சகஜமாக்க தினந்தோறும் 20 நிமிடங்கள் கட்டாயம் ஆங்கிலத்திலேயே மாணவர்கள் பேசச் சொல்கிறோம். மதியம் 1.40 முதல் 2 மணி வரை ஆங்கிலத்திலேயே பேசிச் சிரிக்கின்றனர். தேவையின்போது மட்டுமல்ல ஓய்வு நேர அரட்டை நடந்தால் மட்டுமே மொழி வளர்ச்சி பெறும். தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஆங்கிலம் பேசுவது தவிர்த்து, அதை ஒரு பழக்கமாகவே மாற்றுவதால் உரையாடல் எளிதாகிறது.

மறக்கமுடியாத சம்பவம்

ஒருமுறை துறை சார்ந்து மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது விவசாயி போன்ற வேடம் தரித்த 8-ம் வகுப்பு மாணவன், விவசாயிகளின் நிலை குறித்து விவரித்துக் கொண்டிருந்தான். ’விவசாயிகளுக்கு யாருமே பெண் கொடுப்பதில்லை’ என்று கூறிக் கொண்டிருந்தபோது இடைமறித்தேன். ’என்னுடைய பெண்களில் ஒருவரை உனக்குத் தருகிறேன்’ என்று கூற, அதைப் புரிந்துகொண்டு வெட்கப்பட்டான். அந்தச் சிரிப்பு இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.



மாணவர்களின் ஆங்கில உரையாடலுக்காகவே இரண்டு ஆண்டுகள் செலவழித்து, 10 மெட்டீரியல்களைத் தயார் செய்திருக்கிறேன். மாணவர்கள் பேசுவதைக் கேட்டு, இதுவரை பெருந்தலையூர், கூகையூர் உள்ளிட்ட 15 பள்ளிகளில் இதே பயிற்சியை அளித்து வருகின்றனர். ஆசிரியர் குருமூர்த்தி, ஆசிரியர் காமராஜ் உள்ளிட்ட பல ஆசிரியர்கள் நேரடியாக பள்ளிக்கே வந்து பயிற்சி பெற்று, தங்கள் பள்ளிகளில் செயல்படுத்தி வருகின்றனர்.


இந்தப் பயிற்சியை ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே எங்கே ரிசல்ட் என்று தேடக்கூடாது. 6 மாதங்கள் பொறுமையாகக் கற்பித்தால் போதும். மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவர். Tri -Verb Technique மூலம் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட தனுஷ்குமார் என்னும் 14 வயது மாணவன், ஓரளவு ஆங்கிலம் பேசியதையே என்னுடைய சாதனையாக நினைக்கிறேன்.

எதிர்காலத் திட்டங்கள்...

அடுத்ததாக இரண்டு வார்த்தைகளைச் சேர்த்து கூட்டு வார்த்தைகளைக் கற்பிக்கத் திட்டமிட்டு வருகிறேன். சோதனை அடிப்படையில் 3, 4-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசுவது குறித்து ஆரம்பக்கட்டப் பயிற்சி அளிக்கிறேன். அரசுப் பள்ளியில் படித்தால் ஆங்கிலம் வராது என்னும் பொதுப்புத்தி, இதன்மூலம் மாறினால் போதும்'' என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் சிவக்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent