இந்த வலைப்பதிவில் தேடு

`அவமதிப்பாக பேசுகிறார்; அநாதை என்கிறார்'- மாணவர்களால் ஆசிரியைக்கு நேர்ந்த துயரம்! #video

புதன், 18 டிசம்பர், 2019



உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்தவர் மம்தா துபே. குழந்தைகள் நல அதிகாரி மற்றும் ஆசிரியரான இவர் Dhaurahra பகுதியில் உள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் பணிபுரிந்துவருகிறார்.


இதற்கிடையே, ஆசிரியர்கள் அறையில் மம்தா உட்கார்ந்திருக்கும்போது அவரை மாணவர்கள் சிலர் சூழ்ந்துகொண்டனர். பின்னர் முதலில் மம்தாவின் ஹேண்ட் பேக்கை தூக்கி எறிந்தவர்கள் சில மணித்துளிகளில் நாற்காலியைத் தூக்கி அவரை அடித்தனர்.


இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில், ``மம்தா அவமதிப்பாகப் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்" என மாணவர்கள் புகார் கூற, மற்றொரு மாணவரோ, ``அவர் என்னை அநாதை என்று அழைத்தார்" என்று குற்றம் சாட்டினார். இதுவே மாணவர்களின் கோபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், ஆசிரியை மம்தாவோ வேறு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ``இந்த முழுத் தாக்குதலுக்கும் காரணம் ஆசிரமத்தின் மேலாளர்தான். அவர்தான் மாணவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்தார்.




இதற்கு முன்பே இங்கு நான் பணியில் இருந்தேன். அப்போதும் மேலாளரால் துன்புறுத்தப்பட்டு வேலையைவிட்டு நீக்கப்பட்டேன். ஆனால், மாவட்ட கலெக்டர் தலையீட்டால் மீண்டும் இந்தப் பணியைப் பெற்றேன். அப்போதிருந்தே என்னை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார் அந்த மேலாளர்.



இந்தத் தாக்குதலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் மாணவர்களால் நான் பாத்ரூமில் அடைக்கப்பட்டேன். அதை புகார் செய்தபோது மாணவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என அலட்சியமாகப் பதில் கொடுத்தார்கள் ஆசிரம நிர்வாகத்தினர். இது நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு இப்போதும் மாணவர்களால் தாக்கப்பட்டேன். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள் ஆசிரியையை தாக்கும் சிசிடிவி காட்சி வீடியோ வைரலாகி வருகிறது. அதேநேரத்தில் போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent