தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.
மதுரை ஒய்.நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.லூயிஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் 13.9.2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் 5, 8-ம் வகுப்பு மாணவிகள் அடுத்த 2 மாதத்தில் மறு தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றி பெற வேண்டும்.
இந்தச் சிறு வயதில் மாணவ, மாணவிகளை மறு தேர்வு எழுதக் கட்டாயப்படுத்துவது மாணவ, மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும். தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் 5, 8-ல் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கக் கல்வித்துறை தீவிரமாக உள்ளது.
எனவே தமிழகத்தில் நடப்பாண்டில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாகக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையைகச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்தரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் கூறும்போது, ''5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தொடக்கக்கல்வி நிலையில் வருகின்றனர். தொடக்கக்கல்வி நிலையில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கக்கூடாது என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பொதுத்தேர்வு அமல்படுத்தப்படுகிறது.
இது மாணவர்கள் மத்தியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிக இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். இந்த பொதுத்தேர்வு முறையைத் தமிழகம் மட்டுமே அமல்படுத்தியுள்ளது. பிற மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த முறை அமலில் இல்லை. எனவே அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்றார்.
அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடுகையில், ''மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியைத் தரமானதாக வழங்க வேண்டும் என்பதற்காகவே பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும். இதனால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை என்ன? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், ''மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை குறித்து அரசு முடிவு செய்யும். 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பித் திருத்தப்படுமா? என்பதும் அரசின் பரிசீலனையில் உள்ளது'' என்றார்.
இதையடுத்து இந்த மனு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக