இந்த வலைப்பதிவில் தேடு

10, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை கடுமையாக கண்காணிக்க நெறிமுறைகள் வெளியீடு

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020



பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுக்கால ஹெல்ப் லைன்களும் வெளியிட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த தேர்வை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் எழுத உள்ளனர். இவற்றில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு 4ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு 27ம் தேதியும் தொடங்க உள்ளன. இந்நிலையில் தேர்வுப்பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

அதேபோல சுமார் 4000 பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட உள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்காக வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட கையேடு ஒன்றை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பறக்கும் படையினர்:


* முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தனித் தனியாக அமைக்கும் பறக்கும் படையினர் ஒரே நேரத்தில் ஒரே தேர்வு மையத்தை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும்.

* அடிக்கடி புகார்களுக்கு இடமான தேர்வு மையங்களை பறக்கும் படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

* அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் நிலையான பறக்கும் படை அமைத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு பறக்கும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து ஊடகங்களில் வெளியாக உள்ளதால் ஒழுங்கீனச் செயல்கள் குறையும். அதனால், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோரை கையும் களவுமாக பிடிக்கும் போது, மாணவர்களிடம் இருந்து கைப்பற்றிய விடைத்தாள் மற்றும் மற்ற ஆவணங்களில் சம்மந்தப்பட்ட மாணவர்களின் கைப்படவே பதிவெண்களை எழுத வைத்து, அத்துடன் பறக்கும் படையினர் அறிக்கையையும் இணைத்து முதன்மைக் கண்காணிப்பாளிடம் ஒப்படைக்க வேண்டும்.

* தேர்வு எழுதும் அறையில் சந்தேகப்படும் வகையில் உள்ள மாணவர்களிடம் மட்டும் சோதனை செய்ய வேண்டும்.

* மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினால் அது குறித்து கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக போலீசில் புகார் தெரிவித்து அது குறித்த விவரங்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். இது தவிர ஆய்வு அதிகாரிகளாக நியமிக்கப்படும் கல்வி அதிகாரிகள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே தேர்வு மையங்களை பார்வையிட வேண்டும். 

கேள்வித்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பாக இருக்கின்றவா என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent