தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. அதாவது, அரசு பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து, அவற்றை குறைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் ஐஏஎஸ் அதிகாரி சித்திக் அடங்கிய குழு அமைத்து கடந்த 2018 பிப்.19ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்தக்குழு 6 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் தேவையற்ற செலவினங்களை குறைப்பது என்று தமிழக அரசு முடிவு செய்தது.
இதை தொடர்ந்து இக்குழு சார்பில் அனைத்து துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது. அதில், உள்ளாட்சி அமைப்புகளில் தேவையற்ற பணியிடங்களை குறைக்க, அரசு பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாமா என்பது தொடர்பாக பரிந்துரை செய்ய கூறியது.
அதன்படி தங்களது துறையில் உள்ள தற்போதைய பணியிடங்கள் மற்றும் காலி பணியிடங்கள் குறித்து அந்தெந்த துறை சார்பில் இக்குழுவுக்கு அறிக்கை அனுப்பி வைத்தது. மேலும், இந்த குழுவுக்கு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் கோரிக்கை மனுவையும் அளித்து இருந்தது. இந்த குழு 6 மாதங்களுக்குள் விசாரணை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், அறிக்கை தயாரிப்பதில் காலதாமதத்தால் 2 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த குழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் தலைமை செயலகத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் படி, அரசு பணியிடங்களில் குறைக்கப்படும் இடங்கள் மற்றும் அரசு நிர்வாகத்தில் என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பாக தெரிந்து கொள்ள அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் இந்த அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதேபோல படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களின் அரசு பணி என்ற கனவும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தேவையற்ற பணியிடங்களை குறைப்பது, அரசு பணியிடங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிப்பது குறித்து அறிக்கையில் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக