இந்த வலைப்பதிவில் தேடு

இட ஒதுக்கீடு சர்ச்சை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் என்ன நடக்கும்? வல்லுநர்கள் கூறுவது என்ன?

புதன், 12 பிப்ரவரி, 2020



மாநில அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லையென்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லையென்றும் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தேசிய அளவில் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது.


2001ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலம் உருவானபோது அம்மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு 19% இட ஒதுக்கீடும் மலைவாழ் மற்றும் பழங்குடியினருக்கு 2 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க முடிவெடுக்கப்பட்டது.

அதனை எதிர்த்து சிலர் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பளித்த உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றம் 'பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதா, இல்லையா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு குறிப்பிட்ட பிரிவினர் போதிய அளவில் அரசுப் பணிகளில் பிரதிநிதித்துவம் பெறவில்லை என்பதை புள்ளிவிவரங்களின் மூலம் உறுதிசெய்ய வேண்டும். அதனை எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றம் ஆராயும்' என்று கூறியது.


இதையடுத்து புள்ளி விவரங்களைச் சேகரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அறிக்கை ஒன்றையும் அளித்தது. அதன்படி, எஸ்சி/எஸ்டி பிரிவினர் அரசுப் பணிகளில் போதுமான அளவில் இல்லையென அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இருந்தபோதும் அப்போதைய மாநில அரசு (காங்கிரஸ்) பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது இல்லை என்ற முடிவை மேற்கொண்டது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்த உத்தரகண்ட் உயர்நீதிமன்றம், அரசின் முடிவை ரத்துசெய்தது. மேலும், எஸ்சி-எஸ்டி பிரிவினர் பின்தங்கியிருக்கிறார்களா என்பதை நிரூபிக்க தகவல்களைச் சேகரிக்க வேண்டியதில்லை என்றும் தீர்ப்பளித்தது. நியமனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்படி கூறியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய மாநில அரசு (பா.ஜ.க.) உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதில் வழங்கப்பட்ட தீர்ப்பில், மாநில அரசு எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது கட்டாயமல்ல என்றும் அரசமைப்புச் சட்டத்தின் 16 (4) பிரிவு, இட ஒதுக்கீடு வழங்க வழிசெய்யும் பிரிவே தவிர, கட்டாயமாக்கும் பிரிவு அல்ல என்றும் கூறியது.

மேலும் ஒரு பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பாக, அவர்கள் போதுமான அளவில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லையென்பதை நிரூபிப்பதற்கான தகவல்களை சேகரிக்க வேண்டுமென்றும் கூறியது.


இதனை எதிர்த்து உச்ச நீதின்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில்தான் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எந்தக் கட்டாயமும் இல்லை
"இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. பதவி உயர்வுகளில் தனக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை எந்தத் தனிநபரும் அடிப்படை உரிமையாகக் கோர முடியாது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என எந்த ஒரு கட்டளையையும் நீதிமன்றங்கள் மாநில அரசுகளுக்குப் பிறப்பிக்க முடியாது" என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

இட ஒதுக்கீடு வழங்குவதை வரையறுக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் 16 (4), 16 (4-A) ஆகியவை இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு என்பதை அடிப்படை உரிமையாக வரையறுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. எஸ்டி, எஸ்சி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசாங்கப் பணியில் போதுமான அளவில் இல்லையென மாநில அரசு கருதினால், பணி நியமனத்தின்போதும் பதவி உயர்வின்போதும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக மட்டுமே இந்தப் பிரிவுகள் இருக்கின்றன என்றும் கூறியுள்ளது.

குறிப்பிட்ட பிரிவினருக்கு சரியான அளவில் பிரதிநிதித்துவும் இருக்கிறதா என்பதை மாநில அரசுதான் முடிவுசெய்யும் என்றும் தேவைப்பட்டால் இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுக்கு இருக்கிறதென்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பினால், தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் நேருமோ எனப் பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்ட சில தீர்ப்புகள், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில சந்தேகங்களையும் குழப்பங்களையும் எழுப்பியுள்ளன.

எம். நாகராஜ் VS இந்திய அரசு


எம். நாகராஜ் VS இந்திய அரசு என்ற வழக்கில் 2006ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இட ஒதுக்கீட்டிற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, ஒரு பிரிவினர் பின்தங்கியிருக்கிறார்களா என்பதற்கான தரவுகள், பிரதிநிதித்துவத்தில் பின்தங்கியிருப்பதற்கான தரவுகள் ஆகியவற்றை வழங்க வேண்டுமென்றும் வருமான வரம்பை நிர்ணயிக்க வேண்டுமென்றும் 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி பிரிவினர்கூட பின்தங்கியிருக்கிறார்களா என்பதை தரவுகளின் அடிப்படையில்தான் உறுதிப்படுத்த வேண்டுமென இந்தத் தீர்ப்பு கூறியதால்,பெரும் சர்ச்சை உருவாகியது.

அதற்கு முன்புவரை, எஸ்சி, எஸ்டி பிரிவுக்குள் ஒரு ஜாதியினர் பட்டியலிடப்பட்டாலே அவர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக, போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதவர்களாக கருதப்பட்டனர். அவர்கள் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும்தான் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதால், அந்தப் பிரிவினரின் பொருளாதார நிலை இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படையாகக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், ஜர்னெய்ல் சிங் VS லக்மி நரெய்ன் குப்தா வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டது. அதன்படி, நாகராஜ் வழக்கில் நீதிமன்றம் தவறிழைத்துவிட்டதாகவும் அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கோரப்பட்டது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவில் இருந்தாலே அவர்கள் பின்தங்கியவர்கள்தான் என ஒப்புக்கொண்டது. ஆனால், நாகராஜ் வழக்கில் போடப்பட்ட பிற கட்டுப்பாடுகள் செல்லுமெனக் கூறியது.

ஆனால், நாகராஜ் வழக்கும் ஜெர்னெய்ல் வழக்கும் பதவி உயர்வு தொடர்பான வழக்குகள் என்பதால், நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகள் பதவி நியமனத்திற்கும் செல்லுமா என்ற குழப்பம் நீடிக்கவே செய்கிறது.

இந்த நிலையில்தான், இட ஒதுக்கீடு வழங்குவதை மாநில அரசு முடிவுசெய்யலாம் என உத்தரகண்ட் மாநிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்திருக்கிறது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், ஒரு பிரிவினர் உண்மையிலேயே பின்தங்கியிருக்கிறார்களா என்பதை தகுந்த தரவுகளின் மூலம் நிறுவச் சொல்லும் நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்காமல் இருக்க எந்தக் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை என்பதை பல சமூக நீதி ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அரசியல்சாசனத்தை சுட்டிக்காட்டுகிறது.

"நீதிமன்றங்கள் சட்டரீதியாக அப்படித்தான் முடிவெடுக்கும். இட ஒதுக்கீட்டிற்கென அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு, இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகுக்கிறது. அதைக் கட்டாயமாக்கவில்லை. அதனால்தான் நீதிமன்றம் இப்படித் தீர்ப்பளித்திருக்கிறது" என்கிறார் தி ஹிந்து நாளிதழின் மூத்த பத்திரிகையாளரான கே. வெங்கடராமணன்.

"இட ஒதுக்கீடு தொடர்பாக அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவுகள், Enabling பிரிவுகள். இந்தப் பிரிவுகள் மத்திய - மாநில அரசுகள் சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டத்திற்கு வழிவகைகளை வழங்குகின்றன. ஆனால், அது கட்டாயமல்ல" என்கிறார் மூத்த வழக்கறிஞர் கே.என். விஜயன்.

தேர்தலின்போது, எஸ்சி, எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்பட விகிதாச்சாரம் அளிக்க வேண்டும் என்பதை அரசமைப்புச் சட்டம் கட்டாயமாக்குகிறது. ஆனால், கல்வி, வேலை வாய்ப்புகளில் கட்டாயமாக்கவில்லை. அதைத்தான் இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், சர்ச்சைக்குரிய தீர்ப்பாகத் தோன்றினாலும், அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது என்கிறார் விஜயன்.

இந்தத் தீர்ப்பை முன்மாதிரியாக வைத்து, வேறு மாநிலங்கள் இட ஒதுக்கீடு வேண்டாம் என முடிவுசெய்ய முடியுமா? "முடியும். அப்படி நடந்தால் அதனை அரசியல் ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும் சட்டரீதியாக அல்ல" என்கிறார் வெங்கடரமணன்.

ஏற்கனவே மேற்குவங்கம் போன்ற சில மாநிலங்கள் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் விஜயன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான சட்டப்பிரிவு அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது.


இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் நாகராஜ் வழக்கில் தீர்ப்பளித்த நிலையில், கூடுதலாக உள்ள 19 சதவீத இடங்களை கூடுதலாக ஏற்படுத்தி, இந்த இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்திய பிறகு, பல மாநிலங்கள் 50 சதவீதத்திற்கு அதிகமாக இடஒதுக்கீட்டை வழங்கிவருகின்றன.

நன்றி : தமிழ் பிபிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent