இந்த வலைப்பதிவில் தேடு

பாடாய்படுத்தும் U - DISE பதிவேற்றம்... மன உளைச்சலில் தலைமையாசிரியர்கள்.!!!

சனி, 29 பிப்ரவரி, 2020




கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான யு-டைஸ் பதிவேற்றத்திற்காக அதிக நேரம் தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் காத்திருக்கும் நிலை உருவாவதால் பெரும்பாலான தலைமையாசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.


கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்களை அளித்து தரவுகளை திரட்டி ஒருங்கிணைந்த குறுவள மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட வேண்டும்" என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை யு-டைஸ் (U-DISE - Unified District Information System for Education) என்பது இந்தியாவில் உள்ள பள்ளிகளைப் பற்றிய ஒரு தகவல் தரவுத்தளம் ஆகும்.





இத்தரவத்தளம் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டது. இது பள்ளிகளின் நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் இடைநிற்றல் ஆகிய தகவல்களை பதிவு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப் 30 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


கடந்த ஆண்டு வரை ஒருங்கணைந்த கல்வி இயக்கம் மூலம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று உரிய படிவங்கைள அளித்து தரவுகளை திரட்டி வந்தனர். அத்தரவுகளை வட்டார வளமைய அலுவலகம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தனர். 

ஆனால் இந்தாண்டு எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS - Educational Management Information System) இணையத்தளத்தில் தலைமையாசிரியர்களே நேரடியாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்துவதால் கிராமப்புற பள்ளிகளை சார்ந்த தலைமையாசிரியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுக்குறித்து பேசிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியனோ., " எமிஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னால் அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசிரியர், மாணவர் வருகை, விலையில்லா பாடப்பொருட்கள் விநியோகம், மாணவர்களது கல்வி செயல்பாடுகள் என அனைத்தும் இணைய வழியே மேற்கொள்ளப்படுகிறது. இது வரவேற்க வேண்டிய மாற்றம் என்றாலும் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியில்லாத கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது.



கடந்த காலங்களில் யு-டைஸ் படிவங்கள் பள்ளிகளுக்கு நேரிடையாக வழங்கப்பட்டு விபரங்கள் பெறப்படும். அதன் பின்னால் அவ்விபரங்கள் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்வார்கள். ஆனால் இந்தாண்டு 54 பக்கங்கள் கொண்ட படிவத்தினை தலைமையாசிரியர்களே இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்து உரிய ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்புதல் வாங்கி அதை ஒவ்வொரு தலைமையாசிரியரும் குறிப்பிட்ட நாளுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஒருங்கிணைந்த கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. 


தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இணையத்தள வசதி இல்லாததால் அவர்கள் தனியார் கம்யூட்டர் மையங்களை நாட வேண்டியுள்ளது. அவ்வாறு தனியார் மையங்களில் பதிவேற்றம் செய்யும்பொழுது சர்வர் தாமதத்தால் பல மணி நேரம் அங்கு காத்திருக்க வேண்டியுள்ள நிலைமை ஏற்படுகிறது. மேலும் பதிவேற்றம் செய்த தரவுகள் முறையாக சேமிப்பு ஆகாததால் மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் தலைமையாசிரியர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

80 சதவீதத்திற்கு மேல் பெண்களே தலைமையாசிரியர்களாக உள்ளதால் அவர்கள் நீண்ட நேரம் கம்யூட்டர் மையங்களில் காத்துக்கிடப்பதில் பல்வேறு பிரச்சணைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே கடந்த காலங்கள் போலவே ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் உரிய படிவங்களை அளித்து தரவுகளை திரட்டி ஒருங்கிணைந்த குறுவள மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent