கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தனிமை கண்காணிப்பை மீறினால் 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இருப்போர் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவது போல அவர்களின் உறவினர்கள், கொரோனா அறிகுறி இருப்போர், கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வருவோர் ஆகியோர் வீடுகளில் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதன்படி துபாயில் இருந்து மதுரை வந்த இரண்டு குழந்தைகள் உட்பட 155 பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களில் எவருக்கும் அறிகுறி இல்லை என தெரியவந்தது. இருந்தாலும் குறிப்பிட்ட நாட்கள் வரை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்க அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து, எந்த தேதி வரை அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் வகையில் அழியாத மையை கொண்டு அவர்களின் கைகளில் முத்திரையிடப்பட்டது. மேலும், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வது, அரசு பேருந்துகளில் பயணிப்பது உள்ளிட்டவற்றை தவிர்க்க அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
6 மாத சிறை தண்டனை, அபராதம்:
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உறவினர், கொரோனா அறிகுறி கொண்டோர் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோல தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்ட போதிலும் அதிலிருந்து சிலர் தப்பி சென்று வெளியே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டு வரும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு கண்காணிப்பை மீறுவோருக்கு 6 மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொற்று நோய் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அளித்திருப்பதாகவும், மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அறிவுரைகள், வழிகாட்டுதல்களை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், தனிமை கண்காணிப்பு, சமூக விலகலால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக