இந்த ஆண்டு கோடை வெயிலுக்கான, முதல் எச்சரிக்கையை, வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. ஏழு மாவட்டங்களில், இன்று, 2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெயில் அதிகரிக்கும் என, கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கோடை வெயிலுக்கான துவக்கமாக, பெரும்பாலான இடங்களில், கடந்த வாரத்தை விட, இந்த வாரம், வெப்பநிலை அதிகரித்துள்ளது. சென்னையில், 33 டிகிரி செல்ஷியஸ்; மதுரை மற்றும் சுற்று மாவட்டங்களில், 36 டிகிரி செல்ஷியஸ் ஆகவும், வெயில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், 'ஏழு மாவட்டங்களில், இன்று இயல்பான வெப்பநிலையை விட, 2 முதல், 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரிக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல், கரூர், பெரம்பலுார் மற்றும் திருச்சி மாவட்டங்கள், அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. மேலும், 'நீலகிரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று சில இடங்களில், லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் வறண்ட வானிலை நிலவும்' என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக