8 வருடங்கள் முடிந்து 9-வது கல்வியாண்டு நடக்கும் நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள், தற்போது ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாகப் பெறுகிறார்கள் என்றும், அவர்களை வரும் கல்வியாண்டில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்ட கல்வி இணைச் செயல்பாடு பாடங்களுக்காக 16,549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி, அதில் ரூ.5,000 தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
8 வருடங்கள் முடிந்து 9-வது கல்வியாண்டு நடக்கும் நிலையில், பகுதி நேர ஆசிரியர்கள், தற்போது ரூ.7 ஆயிரத்து 700 மட்டுமே தொகுப்பூதியமாகப் பெறுகிறார்கள் என்றும், அவர்களை வரும் கல்வியாண்டில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.
தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், “எங்களுடன் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்ததில், மரணம், பணி ஓய்வு, பணி ராஜினாமா என தற்போது 12 ஆயிரத்திற்கும் குறைவான பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகிறார்கள்.
முதல்வரின் 110விதி அறிவிப்பின்படி, அனைத்து மாதங்களுக்கும் சம்பளம், பணிநியமன அரசாணை 177-ன்படி 4 பள்ளிகளில் வேலை, இறந்தவர் குடும்பங்களுக்கும் மற்றும் 58 வயது பணி ஓய்வில் சென்றவர்களுக்கும் ரூ.3 லட்சம் குடும்பநல நிதி, மகளிர் ஆசிரியர்களுக்கு மகப்பேறு காலவிடுப்பு, 7-வது ஊதியக்குழு ஆணைப்படி 30 சதவிகித ஊதிய உயர்வு, அருகில் உள்ள பள்ளிகளில், விரும்பும் பள்ளிக்கு பணிமாறுதல் போன்ற பண சலுகைகளை வழங்காமலும், பணிநிரந்தரம் செய்யாமலும் இருக்கிறார்கள்.
தவிர, 2017ம்ஆண்டு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்றத்தில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்துவருகிறது எனவும், மேலும் இதற்காக 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். ஆனால், 2 வருடங்கள் ஆச்சு. இதுவரை கமிட்டி குறித்த அறிவிப்பு என்னாச்சு என்று தெரியவில்லை.
பள்ளிக் கல்வித்துறையில் இதற்கு முன்னர் பகுதிநேரமாக நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பின்னர் முழுநேர வேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக உள்ளாட்சித் துறையில் நியமிக்கப்பட்ட பகுதிநேர எழுத்தர்கள், பிறகு முழுநேர வேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். வருவாய்த் துறையில் பகுதிநேரமாக நியமிக்கப்பட்ட கிராம முன்சீப், கர்ணம், மணியக்காரர், தலையாரி உள்ளிட்ட பதவிகளும் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 2020-ல் 16,508 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள், 3 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தவர்களைச் சிறப்பு காலமுறை ஊதியத்தில் தமிழக அரசு பணியமர்த்தியுள்ளது. ஆனால், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதற்காக, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், சட்டசபைக் குழு தலைவர் உள்ளிட்டோருக்குத் தொடர்ந்து கருணை மனுக்களை அனுப்பிவருகிறோம்.
இதுகுறித்த அறிவிப்பு, பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியாகும் என எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனால், எங்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் மட்டுமே பரிசாகக் கிடைத்தது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பகுதிநேரமாகப் பணிபுரியும் 12 ஆயிரம் ஆசிரியர்களை இன்னும் அடுத்த முன்னேற்றமான நிலைக்குக் கொண்டுசெல்லாமல் வைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையை மாற்றி, முதல்வரின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு செய்து, இவர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
பல்வேறு காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களைப் பயன்படுத்தியே, அரசுப் பள்ளிகளை தமிழக அரசு நடத்தியுள்ளது. மனிதநேயத்துடன் எங்களின் குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட கருணையுடன் கூடுதல் நிதி ஒதுக்கி, இவர்களின் நீண்டகால வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக