இந்த வலைப்பதிவில் தேடு

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க சென்ற ஆசிரியரை போலீசார்‌ தாக்கியதாக புகார்‌

திங்கள், 23 மார்ச், 2020



ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய பள்ளி ஆசிரியர்‌ காவல்துறையினரால்‌ தாக்கப்பட்ட சம்பவம்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று நாடு முழுவதும்‌ சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு தமிழகத்திலும்‌ கடைப்பிடிக்கப்பட்டது. இதனால்‌ பேருந்துகள்‌, உணவகங்கள்‌, ரயில்‌ சேவைகள்‌ ரத்து செய்யப்பட்டன.

இதனையடுத்து அவர்களுக்கு சில தொண்டு அமைப்புகள்‌ உதவும்‌ வகையில்‌, உணவு பொட்டலங்களை வழங்கினர்‌.



அதேபோல தஞ்சாவூரில்‌ உள்ள பேராவூரணி பேருந்து நிலையத்தில்‌ உணவு இல்லாமல்‌ ஆதரவற்ற சிலர்‌ தவித்து வந்துள்ளனர்‌. இந்தச்‌ செய்தியைக்‌ கேட்ட  பள்ளி ஆசிரியர்‌ உதயகுமார்‌, தனது இல்லத்தில்‌ உணவு தயாரித்து
நண்பர்‌ ஒருவர்‌ உதவியுடன்‌ சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளார்‌.



இதனையடுத்து உணவு கொடுத்துவிட்டு வீடு திரும்பும்‌ போது, காவல்துறையினருக்கும்‌ உதயகுமாருக்கும்‌ வாக்குவாதம்‌ ஏற்பட்டதாக தெரிகிறது. இதில்‌ காவல்துறையினரின்‌ தலைக்கவசத்தால்‌ உதயகுமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனைத்‌ தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில்‌ காவல்‌ உதவி ஆய்வாளர்‌ திருநாவுக்கரசு மீண்டும்‌ உதயகுமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.





இதுகுறித்து உதயகுமார், ``சாலையோரத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக உணவுப் பொட்டலங்களுடன் சென்ற என்னையும், என் நண்பரையும் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீஸார் வழிமறித்தனர். உடனே திருநாவுக்கரசர், உன்னை யார் வெளியில் வரச் சொன்னது?’ என எடுத்த எடுப்பிலேயே ஏக வசனத்தில் பேச, பசியால் வாடுபவர்களுக்கு சாப்பாடு கொடுக்கச் செல்கிறேன் சார்’ என நான் சொன்னேன். `நீ என்ன அரசாங்கமா?’ எனக் கொஞ்சம் கூட மனித நேயமே இல்லாமல் பேசினார். `என்ன சார் இப்படி பேசுறீங்க’ என கேட்க, போலீஸ் கிட்டயே வாக்கு வாதம் செய்றியா எனக் கூறி, `உன் லைசென்ஸ் எங்கே... இன்சூரன்ஸை எடு’ என்று கேட்டு, வண்டி சாவியைப் பிடுங்கிக்கொண்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே, அருகில் இருந்த தாசில்தாரிடம் சென்று நான் முறையிட்டதற்கு அவர், "144 தடை உத்தரவு போட்டு இருக்கும்போது, நீ எதற்கு வெளியில் வந்தாய்" என்றார். இதையடுத்து நான் கிளம்ப, எஸ்ஐ திருநாவுக்கரசர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். `என்னை ஏன் சார் அடிச்சீங்க... அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது?’ என கேட்கவும் அருகிலிருந்த போலீஸ்காரர், ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் கவனிப்போம் என்றார். இக்கட்டான இந்த நேரத்தில், உதவ ஆள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ததை சமூக விரோத செயலை செய்தது போல் தடுத்து போலீஸார் நடந்துகொண்ட விதம் வேதனையளிக்கிறது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதேபோல், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களையும் செய்தி எடுக்கவும் அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



இது தொடர்பாக தாசில்தார் ஜெயலெட்சுமியிடம் பேசினோம், ``சாப்பாடு கொடுப்பதுபோல், ஆதரவற்றர்கள் யாரும் இல்லாத போது சாப்பாடு கொடுக்க செல்வதாகக் கூறினார். அப்போது, போலீஸாருக்கும் அந்தப் பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லை” என்றார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை உதயகுமார் வீட்டுக்குச் சென்ற அருண்குமார் என்ற எஸ்ஐ, உதயகுமாரையும் சம்பவத்தின்போது செல்போனில் வீடியோ எடுத்த விஜய்யையும் விசாரணை என்ற பெயரில் கைதுசெய்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

`சமூக ஆர்வலரான உதயகுமாரை போலீஸார் பழிவாங்கும் நோக்கத்தோடு, போலீஸ் பற்றி அவதூறு பரப்பியதாகவும், பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். மாஸ்க் அணிந்து செயல்படுங்கள் என சொல்லியிருக்கலாம். அல்லது அனுமதி மறுத்திருக்கலாம்.. ஆனால் கைது வரைச் செல்வது, கண்டிக்கத் தக்கது” என அப்பகுதியினர் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent