* சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
* "கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன"
* உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
* எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை - தமிழக அரசு விளக்கம்
கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை என்றும் வாதத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசுகள் அறிவித்த மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லும் குழந்தைகளால் பின்பற்ற முடியாது என்பதால், தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்த நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளின் பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், 2019 - 20 ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்த பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர்.அதேசமயம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவிறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக