இந்த வலைப்பதிவில் தேடு

இலவச கல்வி உரிமை சட்டத்தில் மாற்றம் வேண்டும்!

செவ்வாய், 10 மார்ச், 2020



''ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குழந்தைகள், தரமான கல்வி பெற, இலவச கல்வி உரிமை சட்டத்தில், மாற்றம் கொண்டு வர வேண்டும்,'' என்கிறார், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக சேவகி லஷ்மி கிருஷ்ணகுமார்.
குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொருளாதார பிரச்னையால், குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் போவதை தடுக்கவும், நாடு முழுவதும், கல்வி உரிமை சட்டம், 2010ல் அமல்படுத்தப்பட்டது.ஆனால், ''இச்சட்டம் எதிர்பார்த்த பலனை தரவில்லை; சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டால், அது, ஏழை குழந்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்,'' என்கிறார், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக சேவகி, லஷ்மி கிருஷ்ணகுமார், 40.
அவரிடம் பேசியதிலிருந்து...




உங்களை பற்றி?

குரோம்பேட்டை சொந்த ஊர். சென்னை பல்கலையில், விலை நிர்ணயியல் துறையில் டாக்டர் பட்டமும், ஆடிட்டிங் துறைக்கான, ஐ.சி.டபிள்யூ.ஏ., பட்டமும் பெற்றுள்ளேன். தனியார் பள்ளியில், துணை முதல்வராக பணியாற்றிய போது, இலவச கல்வி உரிமை சட்டம் குறித்தும், மக்களிடையே அச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வின்மை குறித்தும், நண்பர்கள் சிலர் கூறினர். இதனால், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, முடிவு செய்து, என் பணியை ராஜினாமா செய்து, 'பூமி' என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் பணியாற்றி வருகிறேன்.



இலவச கல்வி உரிமை சட்டம் பற்றி?

காங்., ஆட்சியில், 2010ல் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடங்கள், ஏழை மாணவ - -மாணவியருக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு, இச்சட்டத்தின் விதிமுறை பொருந்தாது. இதன்படி, எல்.கே.ஜி., வகுப்புகள் இல்லாத பள்ளிகளில், முதல் வகுப்பில் இருந்து மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.



இந்த சட்டப்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் வழிமுறைகள் என்ன?

ஜாதி, வருமானம், பிறப்பிட சான்றிதழ்கள், ஆதார் கார்டு ஆகியவை முக்கிய ஆவணங்களாகும். ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல், மே மாதங்களில், இந்த சட்டப்படி, பள்ளிகளில் மாணவரை சேர்க்க, விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும்.ஜூன் முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை நடைபெறும். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் கீழ் பணிபுரியும் கல்வி அதிகாரிகள், இலவச கல்வி உரிமை சட்டத்திற்கான மாணவர் சேர்க்கை நடக்கும், ஒவ்வொரு பள்ளியையும் கண்காணிக்க, பள்ளிக்கு ஒருவர் என, நியமனம் செய்யப்படுவர்.அவருடன், பள்ளியின் முதல்வர், பள்ளியில் இச்சட்டத்திற்காக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர் மற்றும் பெற்றோர் முன்னிலையில், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


சுயநிதி பள்ளிகளில் சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா?

சட்டப்படி, புத்தகம் மற்றும் பள்ளி சீருடைக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். எட்டாம் வகுப்பு வரை, சேர்க்கை கட்டணம் உட்பட, வேறு எந்த கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.பெரும்பாலான பள்ளிகள், இதை பின்பற்றுவதே இல்லை. அரசின், கல்வி நிதி ஒதுக்கீட்டில் இருந்து, 6 சதவீத மானியம், இச்சட்டத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும், சில பள்ளிகள், மாணவர்களிடமும் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால், அரசின் மானியத்துடன், மாணவர்களிடம் பெறும் கட்டணம் என, இருதரப்பிலிருந்தும், பெரும் லாபம் பள்ளிகளுக்கு கிடைக்கிறது.



சட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

கல்வி உரிமை சட்டத்தில், 2016 முதல், 2019 வரை, ஆண்டிற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 2018 - -2019ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தின்படி, பெற்றோர், தங்களிடம் உள்ள அரசு ஆவணங்களின், முகவரிக்கு உட்பட்ட, 1 கி.மீ., துாரத்திற்குள் உள்ள சுயநிதி பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம்.கடந்த, 2017 - -2018ம் ஆண்டில், இது, 2 கி.மீ., சுற்றளவாக இருந்தது. 2016 - -2017ம் ஆண்டில், 3 கி.மீ., சுற்றளவாக இருந்தது. அனைத்து சுயநிதி தனியார் பள்ளிகளிலும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

தற்போதுள்ள விதிகளின் படி, முறைகேடான கட்டணம் வசூலிக்கும் புகார்கள் எழுந்தால், பெற்றோர் மட்டுமே, உயர் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு புகார் அளித்தால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் எனக்கருதி, பல பெற்றோர்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை. 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில், குன்றத்துார், சிட்லபாக்கம், கோட்டூர்புரம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றில், முறைகேடாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.என் தலைமையிலான தனியார் தொண்டு நிறுவனக் குழுவினர், சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர்களிடம் பேசினோம். அப்போது, 'சட்டப்படி பெற்றோர் மட்டுமே புகார் அளிக்க முடியும்; புகாரளிக்க நீங்கள் யார்?' எனக் கேட்டனர்.பல பள்ளிகளில், சட்டத்திற்கு புறம்பாக, பெயரிடப்படாத துண்டு காகிதத்தில், 'அட்மிஷன்' கட்டணம் எனக்கூறி, மாணவர்களிடம் முறைகேடாக கட்டண வசூலில் ஈடுபடுகின்றனர்.தனியார் பள்ளிகள் சரிவர கண்காணிக்கப்படாததே, இதற்கு காரணம். முறைகேடுகளை தடுக்க, மாணவர் சேர்க்கை நடைபெறும் போது மட்டுமின்றி, மற்ற நேரங்களிலும், கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளிகளில், திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். புகார்கள் எழுந்தால், உரிய ஆவணங்களுடன், பெற்றோர் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும் புகார் அளிக்கும் வகையில், சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.


மக்கள் செய்ய வேண்டியது என்ன?







பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டுமே மாணவர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிடுகிறார். ஆனால், தனியார் பள்ளிகள் பலவற்றில், ஜனவரி மாதம் முதலே, கல்வி உரிமை சட்டத்திற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து வைக்கின்றனர். அதனால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு, தரமான கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, பெற்றோர், முழு விழிப்புணர்வுடன், இலவச கல்வி சட்டத்தை நன்கு அறிந்த பின், பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.


சட்டம் சார்ந்து, நீங்கள் செய்து வரும் சேவைகள் என்ன?

'பூமி' நிறுவனத்துடன் இணைந்து, காஞ்சிபுரம் மாவட்ட, இலவச கல்வி உரிமை சட்ட பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.தெரு வழிப்பிரசாரம், துண்டு பிரசுரங்கள், முகாம்கள் வாயிலாக, இலவச கல்வி உரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன்.சட்டத்தின்படி, பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் உதவி கேட்பவர்களுக்கு, தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.இலவச கல்வி உரிமை சட்டம் குறித்த ஆலோசனை தேவைப்படுபவர்கள், 90947-83445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent