பள்ளிகளில் பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறைகளில் உணவு அருந்தும் கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிகளில் பல வகுப்பறைகள் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.
இந்த வகுப்பறைகளை பயன்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு இலவச மதிய உணவு வழங்கப்படுவதை மாணவர்கள் திறந்த வெளியிலும் வராண்டாவிலும் ஆங்காங்கே அமர்ந்து உண்ணுகின்ற வழக்கம் பல பள்ளிகளில் இருந்து வருகிறது.
எனவே, மாணவ, மாணவிகள் சுகாதாரமான முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காலியாக மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக சமூக நல ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பள்ளிகளில் கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாமல் மூடிக்கிடக்கும் வகுப்பறையினை மாற்றி சீரமைத்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக அமைத்துத்தர வேண்டும்.
இதற்கு ஏதுவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் முழு முகவரியுடனும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பள்ளியில் உள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை, சத்துணவு உண்ணும் பயனாளிகளின் எண்ணிக்கை, மொத்த வகுப்பறைகள் எண்ணிக்கை, கல்வி பயன்பாட்டிற்கு பயன்படாத வகுப்பறைகள் எண்ணிக்கை போன்ற விபரங்களை சேகரித்து அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக