இந்த வலைப்பதிவில் தேடு

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் வெளியீடு

வியாழன், 5 மார்ச், 2020



இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.




இது சம்பந்தமாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 14 பக்கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை பதிவாளர் ஜெனரல் விவேக் ஜோஷி கண்காணிக்க உள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 2-வது கட்ட பணியும் நடைபெற உள்ளது.

முதல்கட்ட பணியோடு சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல் கட்ட பணியில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 2-வது கட்ட பணியின்போது நேரடியாக அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.


மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் 31 கேள்விகளின் விவரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 3 கேள்விகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 34 கேள்விகளின் விவரம் வருமாறு:-

1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.


15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவறை உள்ளதா? 18. எந்த வகை கழிவறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள். 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 24. டெலிவிஷன் இருக்கிறதா? 25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.


முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent