இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகள் அங்கீகாரம் ரத்தாகும்!

புதன், 18 மார்ச், 2020

'அரசு உத்தரவை மீறி, மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து, வகுப்பு நடத்தினால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.'கொரோனா' நோய் தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும், பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி மையங்களில், மார்ச், 31 வரை, வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் வர வேண்டாம்; பொது தேர்வு மற்றும் பல்கலை தேர்வு உள்ளவர்கள் மட்டும், தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மீறி, சில தனியார் பள்ளிகள், மாணவர்களை நேற்று பள்ளிக்கு வரவைத்து வகுப்பு நடத்தியுள்ளன. இது குறித்து, பெற்றோர் தரப்பில் கல்வி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளி கல்வி முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து வகை அரசு, தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், பள்ளி வேலை நாட்கள் தொடர்பாக, தமிழக அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். தற்போது, அனைத்து வகை பள்ளிகளிலும், கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்கும் வகையில், மாணவர்களுக்கான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி, அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு, பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி, மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து, வகுப்பு நடத்தக்கூடாது.

இந்த உத்தரவை மீறுவோர், பின் விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், சில தனியார் பள்ளிகள், நேற்று மாணவர்களை வரவைத்து வகுப்பு நடத்தியுள்ளன. அந்த பள்ளி நிர்வாகத்தினரை, அதிகாரிகள் நேரடியாக எச்சரித்தனர்.'அரசு உத்தரவை மீறி மாணவர்களை வரவைத்து வகுப்பு நடத்தினால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்தாகும்' என்றும், அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent