இந்த வலைப்பதிவில் தேடு

`பாகிஸ்தானின் பாராட்டு; பாதை வழங்கிய இரான்’ - ஏர் இந்தியாவுக்கு குவிந்த வாழ்த்துக்கள்

செவ்வாய், 7 ஏப்ரல், 2020




சீனாவில் வுகான் நகரிலிருந்து உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று 200-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி 50,000-க்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொண்டுவிட்டது. கொரோனா தொற்று சீனாவில் உறுதியானது முதல் தற்போது வரை பல நாடுகளில் சிக்கியிருக்கும் இந்திய மக்களைத் தாயகம் அழைத்து வர பெரும் சிரமம் மேற்கொண்டு வருகிறது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

சீனாவின் வுகான், இரான், இத்தாலி, ஜெர்மனி, கனடா போன்ற பல நாடுகளில் சிக்கித் தவித்த பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மிகவும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். அதேபோல் இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருள்கள் பிற நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பங்கு எந்த அளவுக்கு உள்ளதோ அதைவிட, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மக்களை மீட்கும் ஏர் இந்தியாவின் பங்கு மிக அதிகமாக உள்ளது. ஏர் இந்தியா பணியாளர்களின் இந்த துணிச்சலான செயலை பிரதமர் மோடி உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.



இந்த நிலையில், இதே ஏர் இந்தியாவை பாகிஸ்தானும் வெகுவாகப் பாராட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஏர் இந்தியா விமானம் மும்பையிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்ஃபர்ட்டுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய இரண்டு விமானங்களை இயக்கியது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பனி போரினால் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வெளியில் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தற்போது ஏர் இந்தியா விமானம் ஜெர்மனி செல்வதற்கு தங்கள் பாதையை அனுமதித்தது மட்டுமல்லாமல் பாராட்டும் தெரிவித்துள்ளது பாகிஸ்தான்.

இது பற்றி ஏ.என்.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ஏர் இந்தியாவின் மூத்த விமான கேப்டன் ஒருவர், ``நாங்கள் ஐரோப்பாவுக்கு விமானம் இயக்கியதைப் பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையம் பாராட்டியுள்ளது. இது எனக்கும் என் குழுவினருக்கும் மிகவும் பெருமையான தருணம். நாங்கள் கராச்சிக்குள் நுழைந்ததும் அந்நாட்டின் விமானக் கட்டுப்பாட்டு மையம் அவர்களின் முறைப்படி வணக்கம் தெரிவித்து, ஜெர்மனிக்கு ஏர் இந்தியாவின் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லும் விமானத்தை வரவேற்பதாகக் கூறினர்.


தொடர்ந்து, `பெரும் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் நீங்கள் விமானங்களை இயக்குகிறீர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்தனர். மேலும் பாகிஸ்தான் விமான வழியின் நிலையை எங்களுக்கு விளக்கினர். அதேபோல் இந்தப் பயணத்தில் இரானும் எங்களுக்குப் பெரிதும் உதவியது. என் மொத்த பைலட் வாழ்க்கையிலும் முதல் முறையாக இரான் தங்கள் வான்வெளியில் 1000 மைல்களுக்கு ரூட்டிங் வழங்கியது. சிறப்பு விமானத்தை இயக்கியதால் இது நடந்தது. அதுவும் இந்த இக்கட்டான சூழலில் இரான் எங்களுக்கு உதவியுள்ளது. இதனால் நாங்கள் பயணிக்கும் தூரம் வெகுவாகக் குறைந்தது.

நாங்கள் இரானின் வான்வெளியை விட்டு வெளியில் செல்லும்போது அந்நாடும் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. இறுதியில் ஏர் இந்தியா விமானம் துருக்கிக்குள் நுழைந்தது. அவர்களும் எங்களுக்குப் பாதை வழங்கி பெருமையுடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்” என உற்சாகமாகப் பேசியுள்ளார்.


இரானின் வான்வெளியைப் பாதுகாக்கும் நோக்கில் வெளி நாடுகளைச் சேர்ந்த விமானங்களுக்கு தங்கள் நாட்டின் நேரடி பாதையை மிகவும் அரிதாகவே அந்நாடு வழங்கும். தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளதால் இரான் உட்பட அனத்து நாடுகளும் மனிதநேயத்துடன் இந்த உதவியைச் செய்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent