Posted By Pallikalvi Tn
நிதி திரட்ட மத்திய அரசுக்குப் பல வழிகள் உள்ளன. அரசுக்கு முறையாக வரிகட்டும் அரசு ஊழியர்கள் தான் கிடைத்தார்களா? இந்தியாவில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் வைத்துள்ள நபர்கள் சுமார் 1,000 பேர் உள்ளனர். அவர்களிடம் ஒரே ஒரு முறை மட்டும் 2 சதவீதத் தொகையை கூடுதல் வரியாக வசூலித்தாலே அரசுக்கு ரூ.20,000 கோடி கிடைத்துவிடும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்து அகவிலைப்படி பிடித்தத்தைக் கைவிடக் கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அன்பரசு, செல்வம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
நேராக வளரும் மரங்களும் நேர்மையாக பணி செய்யும் அரசு ஊழியர்களும்!
காட்டில் நேராக வளரும் மரங்கள் முதலில் வெட்டிச் சாய்க்கப்படும் என்றொரு பழமொழி உண்டு. அதைப்போல்தான் அரசு ஊழியர்களும். நாட்டில் நேர்மையாகப் பணி செய்யும் அரசு ஊழியர்கள் மீதுதான் அரசாங்கத்தின் முதல் தாக்குதல் எப்போதுமே இருக்கும். இதற்கு தற்போதைய மிகச் சிறந்த உதாரணம் மத்திய அரசு அறிவித்துள்ள ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கிடையாது என்ற அறிவிப்பு.
யானைப்பசிக்கு சோளப்பொரி
கரோனா நோய் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்திலும் மிகப் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதும் இந்தியா அதற்கு விதிவிலக்கல்ல என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவின் காரணமாக விளிம்புநிலை மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வருமானம் இன்றித் தவிக்கின்றனர். பல தொழிலாளர்கள் சம்பள வெட்டு, பகுதி வேலை இழப்பு போன்ற கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவற்றை மீட்டெடுக்கவும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலையை பாதுகாக்கவும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யானைப்பசிக்கு சோளப்பொரியைக் காட்டியது போல் உள்ளது.
கார்ப்பரேட்டுகளின் பிரதம காவலர்
கரோனா நோய் தொற்றின் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார அறிஞர் அமெர்த்தியா சென் ஆகியோர் சொன்ன அனைத்து ஆலோசனைகளையும் தூக்கியெறிந்து விட்டு கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என்று சொன்ன பிரதமர் தன்னுடைய எந்த உரையிலும் ஏழை மற்றும் தினக்கூலிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பதிலிருந்து மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பதையும் ஏழைகளுக்கான அரசு அல்ல என்பதையும் இன்னொரு முறை பறைசாற்றியிருக்கிறது இவ்வுலகிற்கு.
வெற்று அறிக்கை விட்ட நிதியமைச்சரும், கரோனா நிதி புரட்சி செய்த ரிசர்வ் வங்கி கவர்னரும்
வங்கிக் கணிதமோ, பொருளாதாரப் பாடமோ படிக்காத தற்போதைய நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் ஏழை எளிய மக்களின் மீதான தங்கள் அக்கறையை எப்படிக் காட்டினார்கள் என்பதை அவர்கள் வெளியிட்ட நிவாரணங்களைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, விவசாயிகளுக்கான ரூ.6000/-நிவாரணத் தொகையிலிருந்து ரூ.2,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பும், தொழிலாளர் தங்கள் வருங்கால வைப்பு நிதியில் சேமித்து வைத்திருக்கும் தொகையில் 75 சதவீதம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும், வங்கிகளில் மாதாந்திர தவணைத் தொகை செலுத்துபவர்கள் தங்கள் தவணையை 3 மாதங்கள் கழித்து செலுத்தலாம் என்றும் அறிவிப்பு வெளியானது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு தினக்கூலியில் ரூ.20/-ஐ உயர்த்திப் வழங்கப்படும் என்ற சலுகையும் அனைத்து சிறு, குறு ஏழை விவசாயிகளையும், தொழிலாளர்களையும், உழைப்பாளி மக்களையும் எந்தவகையிலும் காப்பாற்றி கரை சேர்க்காது என்று சொல்லுமளவுக்கு அவர்கள் ஊடக அறிக்கைகள் இருந்தன.
இவற்றையெல்லாம் மொத்தமாக கூட்டிப்பெருக்கி சில லட்சம் கோடிகள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு மக்களுக்குச் செலவிடும் தொகையாக கணக்கிட்டு காட்டி நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் வெற்று அறிக்கை வெளியிட்டுக் காட்டினார்கள்.
வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைகளை மூன்றுமாதம் கழித்துக் கட்டலாம் என்று சொல்லப்பட்ட விதிவிலக்கைப் பெற மக்கள் வங்கிகளை நாடியபோது, 'அசலை மூன்று மாதம் கழித்துக் கட்டினாலும் மூன்ற மாதத்திற்கும் வட்டி கட்ட வேண்டும்' என்ற உள்குத்தைக் காண நேர்ந்தது.
தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து சேமித்து வைத்த வருங்கால வைப்பு நிதியிலிருந்தே பணம் பெற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் அரசு உதவியாம். இவையெல்லாம் நிதி அமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் செய்த கரோனா நிதி புரட்சிகளாகும். தற்போது சுரண்டுவதற்கு வேறு இடங்களே இல்லாத நிலையில் அரசு ஊழியர்களின் அடி வயிற்றில் கை வைத்துள்ளனர் இவர்கள், அகவிலைப்படி நிறுத்தம் என்ற பெயரில்.
மீறப்படும் அதிகாரப் போக்கின் வரம்புகள்
முறையாக அரசுக்கு வருமான வரியைச் செலுத்திவரும் மத்திய மாநில அரசு ஊழியர்களின் பணம் இருக்கும்போது, தேவைப்படும் நேரங்களில் அவர்களுடைய ஊதியத்திலிருந்து பிடித்துக்கொண்டால் யார் கேட்கப்போகிறார்கள் என்ற அதிகாரப் போக்குதான் மத்திய அமைச்சகத்தில் காணப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் 12 நாள் சம்பளத்தை மாதந்தோறும் ஒருநாள் வீதம் பிடித்துக் கொள்ளப்போவதாக அறிவிப்பு செய்ததும், தற்போது அகவிலைப்படியை 18 மாதங்களுக்கு இல்லாததாக்கியிருப்பதும் அதன் வெளிப்பாடுகளே.
இந்த நிலை தொடருமானால் திடீரென்று அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து சில சதவீத ஊதியத்தையும், சரண் விடுப்பு, ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுகால பணப்பலன்களை கூச்சநாச்சமில்லாமல் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை பிரதமரும் நிதியமைச்சரும் ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பது அவர்கள் சொல்லாமலேயே அரசு ஊழியர்கள் புரிந்துகொள்ளக்கூடிய கருத்தாக இப்போது நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள அவமானங்களும், நம்பிக்கைத் துரோகங்களும்
ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பணம் கொடுக்க பெரிய மனது மத்திய அரசுக்கு இருந்தாலும் கஜானாவில் பணமில்லை என்றால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். பாவம் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடனுக்காக ரிசர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடிரூபாயை கொடுத்திருக்கிறது மத்திய அரசு.
இல்லாவிட்டால் கார்ப்பரேட்டுகள் நடுத்தெருவுக்கு வந்திருப்பார்கள். பசியை விட கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து ஆரம்பிக்காத அம்பானி பல்கலைக்கழகத்திற்கு 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிற மத்திய அரசின் பெருந்தன்மை யாருக்காவது புரிகிறதா? குறிப்பிட்ட காலத்தில் புனே நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை அனில் அம்பானி முடிக்கவில்லை என்பதற்காக ஒப்பந்தத்தை முறித்துவிடவில்லை.
மாறாக அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ஐந்து முறை காலநீட்டிப்பும், காலம் கடந்து வேலையை முடித்ததற்கு அபராதம் விதிப்பதற்கு பதிலாக எப்படியும் ஒப்பந்தப் பணியை முடித்துவிட வேண்டும் என்ற அவரின் விடாமுயற்சியை பாராட்டும் விதமாக சிறப்பு நிதி கடனாக ரூ.260 கோடியும் மத்திய அரசு வழங்கி ஊக்கப்படுத்தியதை பாராட்டாவிட்டாலும் குறைந்த பட்சம் யாரும் குறை சொல்லாமலாவது இருக்கலாம் அல்லவா?
நாட்டின் ஒப்புயர்வற்ற தலைவர் படேல் சிலைக்கு ரூ.3000 கோடி செலவிட்டதன் மூலம் இந்தியா ஏழை நாடல்ல என்று உலக நாடுகளுக்கு உணர்த்தியதை எதிர்க்கட்சிகள்தான் பாராட்டவில்லை என்றாலும் மக்கள் பாராட்டியிருக்க வேண்டாமா? குஜராத் புல்லட் ரயிலுக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கினால் பாரபட்சம் என்கிறார்கள், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கினால் ஆடம்பரச் செலவு என்கிறார்கள்.
அப்புறம் எப்படித்தான் இந்தியாவை வல்லரசாக்குவது? தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ரூ.1,00,000 கோடி ஒதுக்கினால் அதற்கு எதற்கு அவ்வளவு தொகை என்கிறார்கள். பிறகு எப்படி குடியுரிமை இல்லாதவர்களை கண்டுபிடிப்பது? குடியுரிமை இல்லாதவர்களை அடைத்து வைக்கும் முகாம்களை கட்டுவதற்கு ரூ.25000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதையும் குறை சொல்கிறார்கள்.
இப்படி அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குறை சொன்னால் எப்படி? - இத்தகைய போக்கில்தான் மத்திய மாநில ஆளும்கட்சி பிரமுகர்களின் பேச்சு இருக்கிறது. அவர்கள் ஏழைகளைப் பற்றியோ, தொழிலாளர்களைப் பற்றியோ, விவசாயிகளைப் பற்றியோ, அரசு ஊழியர்களைப் பற்றியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
ஏழைகளைப் பற்றியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பற்றியும் அரசு ஊழியர்களின் உரிமைகளைக் கேட்டால் கஜானாவில் பணமிருத்தால் பிரதமர் சொல்லியிருக்க மாட்டாரா? என்றுதான் பதில் வருகிறது. மேற்கண்டவாறு கார்ப்பரேட்டுகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பகாசூர கம்பெனிகளுக்கும் கடன் தள்ளுபடி, வரிச்சலுகைகள் அளித்து விட்டு தினக்கூலிகள், நடுத்தர மக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் வந்து கொய் நஹி என்று கைவிரிப்பதானது ஜனநாயகத்திற்கு அரசியல்வாதிகள் செய்யும் அவமானமும் நம்பிக்கைத் துரோகமும் ஆகும்.
அகவிலைப்படி மறுப்பும், அரசு ஊழியர் எதிர்ப்பும்
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் பெரும் பணக்காரர்களுக்கு விசுவாசம் காட்டி அவர்களுக்கு வரிச்சலுகைகளும் கடன் தள்ளுபடிகளும் செய்ததன் காரணமாக விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை அதனால் ஏற்பட்டிருக்கும் பணப்புழக்கத்தை இந்த அகவிலைப்படியைக் கொண்டுதான் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சமாளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு பணப்புழக்கத்தையும் குறைத்துவிடும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர்கள் என்ற போர்வையில் இந்திய அரசின் வரிச்சலுகை மற்றும் கடன் தள்ளுபடிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகப் பெரும் பணக்காரர்களை விட்டுவிட்டு சாமானிய, மாத ஊதியம் பெறும் ஊழியர்களின் குரல் வளையை நெருக்கியிருக்கிறது மத்திய அரசு.
அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் வாராக் கடன்களை வசூல் செய்யலாம். வருமான வரி ஏய்ப்பு செய்தோரிடமிருந்து வசூலாக வேண்டிய தொகையை இத்தகைய நேரங்களில்கூட வசூலிக்கலாம். பேரிடர் காலங்களில் பயன்படுத்த வேண்டிய தற்செயல் நிதி, அவசரகால நிதி உள்ளிட்ட நிதிகளை மக்களுக்குப் பயன்படுத்தலாம்.
நாடாளுமன்ற கட்டிட செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இப்போதைய அவசரத் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டு நாடாளுமன்றம் கட்டுவதை தள்ளிப்போடலாம். ஆனால் இதை எல்லாம் செய்யாமல், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் கைவைப்பதான நடவடிக்கைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமான நிலைபாடுகள் மக்கள் விரோத அரசின் செயல்களாகவே தோன்றுகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில்லா விலையில் விற்கப்படும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல்களின் விலைகள் குறைக்கப்படாமல் தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதும், மக்கள் அன்றாட வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நடத்த அனுமதித்திருப்பது.
பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் பசியைப் போக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதும் அவர்களுக்கான உதவிகளையும், நிவாரணங்களையும் பிரதமர் இன்றுவரை அறிவிக்காமல் உள்ளதையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது கார்ப்பரேட்டுகள் காலடியில் இந்த தேசத்தை அடமானம் வைத்துவிட்டு அவர்களுக்கு சேவகம் செய்துகொண்டு மக்கள் நலனை மறத்துவிட்ட மக்கள் விரோத அரசாகவே தெரிகின்றன.
முன்னுதாரண மாநிலங்கள் காட்டும் வழிகள்
ஒடிசா மாநிலத்தின் முதல்வர் தன் மாநில அரசு ஊழியர்களுக்கான நான்கு மாத உதியத்தை முன்கூட்டியே வழங்கி அவர்கள் கரோனா நடவடிக்கையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள உத்வேகமும் உற்சாகமும் அளித்துள்ளது. கேரளா முதல் தன்னுடைய மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 30 சதவீதம் தொகையை நான்கு மாதங்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுத்துக் கொள்வதாகவும் இந்தப் பணம் அரசு ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் நான்கு மாதங்களுக்குப் பிறகு திருப்பி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மத்திய அரசு இந்த அகவிலைப்படி பிடித்தம் செய்ய வெளியிட்டுள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழநாடு அரசு ஊழியர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
நிதிதிரட்ட மத்திய அரசுக்கு பல வழிகள் உள்ளன. அதை நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தியாவில் 1,000 கோடி ரூபாய்களுக்கு மேல் சொத்துகள் வைத்துள்ள நபர்கள் சுமார் 1,000 பேர் உள்ளனர். அவர்களிடம் ஒரே ஒரு முறை மட்டும் 2 சதவீத தொகையை கூடுதல் வரியாக வசூலித்தாலே அரசுக்கு ரூ.20,000 கோடி கிடைத்துவிடும் நிலையில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொகையானது 18 மாதங்களுக்கும் சேர்த்து சுமார் ரூ.8,000 கோடி மட்டும்தான் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
அகவிலைப்படி பிடித்தம் உத்தரவை திரும்பப் பெறுக
எனவே கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு ஊழியர்களின் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை ஜனவரி 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற்று அதன்மூலம் அரசு ஊழியர்கள் அனைவரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை உத்வேகத்துடன் செய்ய ஊக்கப்படுத்துமாறு பாரதப் பிரதமரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கனிவுடன் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக