Posted By Pallikalvi Tn
இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்ஆப்பை பொறுத்தவரை வீடியோ காலில் தற்போது வரை நான்கு பேர் மட்டும் பேசமுடியும்.
கொரோனா லாக்டௌன் காலத்தில் பலர் தங்களது பெரும்பாலான நேரத்தை மொபைலிலேயே கழித்துவருகின்றனர். வீட்டிலேயே இருப்பதால் தற்போது இணையத்தின் பயன்பாடு வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் இணைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு யூடியூப் போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களின் தளங்களில் பல மாறுதல்களை கொண்டுவந்தன.
இந்த குவாரண்டைன் நாள்களில் நாம் வீட்டை விட்டு வெளியேறி நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு இல்லாததால், வீடியோ கால் வசதிகள் உள்ள Houseparty, Google Duo, Zoom போன்ற செயலிகள் தற்போது பெருமளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதில் Zoom நிறுவனம் உலகமுழுவதும் தங்களுக்கு 300 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாக சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்ஆப்பை பொறுத்தவரை வீடியோ காலில் தற்போது வரை 4 பேர் மட்டும் பேசமுடியும்.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வீடியோ கால் லிமிட்டை நான்கு நபரில் இருந்து எட்டு நபராக உயர்த்தப்போவதாகத் தெரிகிறது. இதற்கான புதிய அப்டேட் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பீடா வெர்ஷனை ஏற்கெனவே வெளியிட்டு அந்நிறுவனம் இவ்வசதியை சோதித்து வருவதாகத் தெரிகிறது. இந்த அப்டேட் வெளியானால் எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் உள்ள குழுக்களில் இந்த புதிய வசதியை முழுமையாக பயன்படுத்தலாம்.
இந்த லாக்டௌவுன் காலத்தில் வாட்ஸ்ஆப் நிறுவனம் ஸ்டேட்ஸ் வீடியோக்களின் நேர அளவினை 15 விநாடியாக குறைத்தது மற்றும் போலியான தகவல்கள் பரவாமல் இருக்க மெசேஜ் ஃபார்வர்ட் செய்வதில் சில நிபந்தனைகள் போன்றவற்றை ஏற்கெனவே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக