இந்த வலைப்பதிவில் தேடு

நகைக் கடன் தள்ளுபடி - மீண்டும் வாய்ப்பு - அமைச்சர் அறிவிப்பு - விதிமுறைகள் என்ன? - முழு விவரம்

வியாழன், 30 டிசம்பர், 2021

 





தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை, சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்கள் சரியான விவரங்களை அளித்த பின்னரே அவை சரிபார்க்கபட்டு அவர்களுக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று வெளியிட்ட விளக்க அறிக்கை: தமிழ்நாடு முழுவதிலும் 48,84,726 நகைக் கடன்களில் 13,47,033 நகைக் கடன்களுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், எஞ்சிய 35,37,693 கடன்களுக்கு தள்ளுபடி இல்லையென்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் கூட்டுறவுச் சங்கங்களில் 31.3.2021 வரை 5 பவுனுக்குட்பட்டு வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.



25,733 கடன்களில் ரூ.2,393.32 கோடி பயிர்க்கடன் தவறான முறையில் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே சட்டமன்றப் பேரவையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நகைக் கடன்கள் வழங்கியதிலும் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பது பூர்வாங்க ஆய்வில் தெரிய வந்துள்ளன. இதுகுறித்தும், சட்டமன்றப் பேரவையில் சில குறிப்பிட்ட நேர்வுகளில் சில மாவட்டங்களில் நகைக் கடன் வழங்கியதில் எவ்வாறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்பதை கோடிட்டு காட்டியுள்ளார். உதாரணமாக ஒரு சில நேர்வுகளில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தில் ஒரே நபர் பல சங்கங்களில் கோடிக் கணக்கில் 800க்கும் அதிமான நகைக்கடன்களை பெற்றுள்ளார். ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர் பல கூட்டுறவுச் சங்கங்களில் பல நகைக் கடன்கள் மூலம் பல லட்சம் கடன் பெற்றுள்ளார். அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை தவறாக பயன்படுத்தி லட்சக் கணக்கில் நகைக் கடன்கள் பெற்றுள்ளனர். போலி நகைகளை அடமானமாக வைத்து நகைக் கடன்களை பெற்றுள்ளனர்.


நகைக் கடன் பெறுவதற்கு நகைகளை அடமானம் பெறாமல் நகைகளை அடமானம் வைத்துள்ளதாக ஏமாற்றி நகைக் கடன்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள முகவரிகளைக் கொண்ட ஆதார் அட்டைகளை வைத்திருப்பவர்கள் பெற்ற நகைக்கடன்கள் உள்ளிட்ட பல விதிமீறல்கள் கண்டறியபட்டுள்ளன. இந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான நகைக் கடன்கள் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. நகைக் கடன்கள் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள் அனைத்தும் மூன்று விதமான நோக்கங்களுக்காக நடைபெற்று இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது, தமிழக அரசு அறிவித்த கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் வழங்கப்பட்ட 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன் தள்ளுபடியை முறைகேடான வழியில் பெறுவதற்கு, கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில் நகைக் கடன் பெற்று மீட்டர் வட்டி, ரன் வட்டி, தண்டல் வட்டி உள்ளிட்ட கந்துவட்டிகளின் மூலம் 24 முதல் 36 சதவிகிதத்தில் அதிக வட்டிக்கு வைத்து பொதுமக்களை சுரண்டும் சமூக விரோதிகளுக்கு, நகை அடகு தொழில் செய்யும் நபர்கள், நகைக் கடனிற்காக பொதுமக்கள் அடகு வைத்த நகைகளுக்கு 24 சதவிதம், 26 சதவிதம் என அதிக வட்டிக்கு நகைக் கடன் வழங்கி அந்தவகைகளை கூட்டுறவு நிறுவனங்களில் அடமானம் வைத்து குறைந்த அளவில் நகைக் கடன் பெறுவதன் மூலம் இரண்டாவது லாபத்தை பெற்றுக்கொண்டு வெளியில் அதிக வட்டிக்கு விட்டு மூன்றாவது லாபத்தையும் பார்ப்பதற்கு. இந்த முறைகேடுகள் அனைத்தும் பூர்வாங்க ஆய்வில் தெரியவந்தவை ஆகும். இதுகுறித்து மாநிலம் முழுவதும் விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



எனவே, இந்த அரசு தேர்தல் அரிவிப்பில் தெரிவித்தவாறு நகைக் கடன் தள்ளுபடியில் உண்மையான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனும், எக்காரணம் கொண்டும் நகைக் கடன் தள்ளுபடி பெறவேண்டும் என்பதற்காக 5 பவுனுக்கு உட்பட்டு பல நகைக் கடன்களாக வைத்திருந்தவர்களும், பான்புரோக்கர்களும் தவறான முறையில் பலனடைந்து பொது மக்களின் வரி பணத்தில் சுமை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை, சரியாக அளிக்க இயலாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்கள் சரியான விவரங்களை அளித்த பின்னரே அவை சரிபார்க்கபட்டு அவர்களுக்கும் ஆய்வின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்படும். ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்துள்ளவாறு 14 லட்சத்துக்கும் அதிகானவர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நகைக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.


ஒரே நபர் தள்ளுபடி பெறவேண்டும் என்ற காரணத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்டு நூற்றுக்கணக்கான நகைக் கடன்களை வைத்துள்ளதால் நகை கடன்களில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதற்கேற்றபடி தகுதியின்மை அடிப்படையிலும், அந்த வகையான நூற்றுக்கணக்கான நகைக் கடன்கள் தள்ளுபடி பெற தகுதியில்லை என்பதால் எண்ணிக்கை பெரிதாக தோன்றலாம். மேலும், மொத்தமுள்ள 48,84,726 நகைக் கடன்களில் 7,65,738 நகைக் கடன்கள் 40 கிராமுக்கும் மேலானவையாகும். மீதமுள்ள 41,18,988 நகைக் கடன்களில் 21,63,441 நகைக் கடன்கள் அனைத்தும் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றவர்கள் சேர்ந்து 40 கிராமுக்கு மேலாக வைத்து பல நகைக் கடன்களாகும். எஞ்சியுள்ள 19,55,547 நகைக் கடன்களில் AAY குடும்ப அட்டையை மற்றவர்கள் பயன்படுத்தி முறைகேடாக நகைக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,20,748 ஆகும். மீதமிருக்கும் 17,34,799 நகைக் கடன்களில் ஏற்கனவே பயிர்க் கடன் தள்ளுபடி பெற்ற 2,13,887 நகைக் கடன்கள் நீங்கலாக மீதமுள்ள 15,09,912 நகைக் கடன்களில் பிற விதிமீறல்களை நீக்கிய பிறகு 13,47,033 (88.50%) நகைக் கடன்கள் தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவையாக கண்டறியப்பட்டுள்ளன.



உண்மையான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன் அடைந்ததை அரசு 100 சதவீதம் தீவிரமான ஆய்வுக்கு பிறகு உறுதி செய்துள்ளது. இந்தநிலையில், சில பத்திரிகைகளிலும், தொகைக்காட்சி ஊடகங்களிலும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட நகைக் கடன் தாரர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி கிடைக்காதது போல செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில், 40 கிராமுக்கு உட்பட்டு நகைக் கடன் வைத்தவர்களின் எண்ணிக்கை 22,52,226 ஆகும். இவர்கள் வைத்துள்ள நகைக்கடன்களின் எணிக்கை 41,18,988 ஆகும். இந்த 22,52,226 நகை கடன்தாரர்களில், தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் 10,18,066 ஆகும். இது ஏறத்தாழ 50 சதவீதம் ஆகும். எனவே, அடிப்படையில்லாத வதந்திகளையும், செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent