இந்த வலைப்பதிவில் தேடு

6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வினாத்தாளில் பாலிவுட் தம்பதியின் மகன் பெயர் என்ன?.. கேள்வி கேட்ட பள்ளிக்கு கல்வித்துறை நோட்டீஸ்

சனி, 25 டிசம்பர், 2021

 




6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான பொது அறிவு வினாத்தாளில் பாலிவுட் தம்பதியின் மகன் பெயர் என்ன? என்ற கேள்வி கேட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்காக பொது அறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், ‘பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது கணவரான நடிகர் சைஃப் அலி கான் ஆகியோரின்  மகனின் பெயர் என்ன?’ என்று கேட்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாவட்ட கல்வித்துறையிடம் புகார் அளித்தனர்.



இதுகுறித்து மாவட்ட பெற்றோர் சங்க தலைவர் அனிஷ் ஜார்ஜாரே  கூறுகையில், ‘பள்ளி நிர்வாகம் நடத்திய பொது அறிவுத் தேர்வில் வரலாற்று சின்னங்கள் மற்றும் பிற பொது அறிவுக் கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து பாலிவுட்  தம்பதியரின் மகனின் முழுப் பெயரைக் கேள்வியாக கேட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், கடந்த 2019ம்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரை எந்த அணி வென்றது என்றும், வட கொரியா நாட்டின் தலைவரின் பெயர் என்ன? என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன’ என்று தெரிவித்தார். இவ்விவகாரம் மாவட்ட கல்வித்துறை வரை சென்றதால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித் துறை சார்பில் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சீவ் பலேராவ் கூறுகையில், ‘6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட பொது அறிவு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகள் விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் அளிக்கும்  பதிலின் அடிப்படையில் பள்ளியின் மீது நடவடிக்கை எடுப்போம். மற்ற வகுப்புகளுக்கு நடத்தப்பட்ட வினாத்தாள் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent