நடப்பு கல்வியாண்டில், 164 அரசு உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, பள்ளிக்கல்வி துறை தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ், தமிழக பள்ளிக்கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதன்படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, 'சமக்ர சிக் ஷா' திட்டம் வழியே, மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு, பள்ளிகளின் உள் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. இந்த வகையில், வரும் கல்வியாண்டில், 164 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, சமக்ர சிக் ஷா திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், சமக்ர சிக் ஷாவின் மாநில திட்ட இயக்குனர், சுதன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தரம் உயர்த்தப்பட உள்ள, 164 அரசு உயர்நிலை பள்ளிகளின் விபரங்கள், மாவட்ட வாரியாக இடம் பெற்றுள்ளன.
இந்த பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, முந்தைய ஆண்டில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட அரசு பள்ளிகளை விட, இந்த ஆண்டில் கூடுதலாக, 164 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக, முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படலாம். இந்த நியமனத்துக்கு முன்பாக, மற்ற பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் அடிப்படையில், தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக