இந்த வலைப்பதிவில் தேடு

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

வெள்ளி, 3 ஜூன், 2022





 1, 2, 3ம் வகுப்புகளுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில் தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. கொரோனா காலத்தில் போதிய அளவில் எழுத படிக்க பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் ெதாடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்று முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சிகளில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் இணைந்து திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.



இது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘1, 2, 3 வகுப்புகளை கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமையப்பெற்ற உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் இணைந்து மாவட்டங்களில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைந்துள்ள பள்ளியை பயிற்சி மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.



அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் கல்வியாளர்கள் அனைத்து நாட்களும் பயிற்சி நடைபெறும் இடத்தில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அளிக்கும் கருத்தாளர்களுக்கான பயிற்சி நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் ஆங்கில பாடத்திற்கும், எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் கணித பாடத்திற்கும், கோட்டார் கவிமணி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தமிழ் பாடத்திற்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தார். பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் ஐந்து நாள் பயிற்சியை இதர தொடக்க நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்குவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent