நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், இந்த தேர்வை எழுதி, அதற்கான தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படிப்புகளை படித்துவிட்டு, ஏராளமானோர் ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும் என எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி விரை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. விண்ணப்பிப்பதற்கு கட்டணமாக ரூ.500 அறிவித்திருந்தது. தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 கட்டணமாக அறிவித்திருந்தது.
இதனிடையே சர்வர் கேளாறு காரணமாக விண்ணப்பிக்க கால அவகாசம் தருமாறு தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 26 வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம்.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக தேர்வை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை எழுத்துத்தேர்வாக நடைபெற்ற நிலையில், இந்த முறை கணினி வழி முறையில் தேர்வு நடத்தவும் ஆலோசித்து வருவதாகவும், அனைவருக்கும் கணினி வழியில் முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளிகள், கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் காட்டி வருவதாகவும், அதேபோன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு என பிரத்யேக மென்பொருளை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, அரசுப் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் உதவிப்பெறும் பள்ளிகளில் பணியில் உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக