கும்மிடிப்பூண்டி அருகே மணலி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்ட சம்பவத்தில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மணலி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சஞ்சய் காந்தி.
இவர் நாள்தோறும் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மது அருந்துவது, சுருட்டு புகைப்பது போன்ற போதைப் பழக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். தலைமை ஆசிரியரின் இந்த அருவருக்கத்தக்க செயலால் மாணவர்கள் பலர் பள்ளிக்கு வருவதை தவிர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடமும் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், பள்ளியை தொடர்ந்து குடி மையமாக பயன்படுத்தி வந்த தலைமை ஆசிரியர் சஞ்சய் காந்தி நேற்று வழக்கம்போல் மது பாட்டிலுடன் பள்ளிக்கு வந்ததுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள் மது போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து வகுப்பறையில் அவர் வைத்திருந்த மதுபாட்டில்களுடன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே பள்ளிக்கு விரைந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் இருந்த அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.இதனால் டாக்டரை பள்ளிக்கு வரவழைத்து தலைமை ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் மது அருந்தியிருப்பது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தரப்பில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதும், மாணவர்களின் நல்லொழுக்கத்தை கெடுக்கும் விதமாக பள்ளியில் மது அருந்தி, புகை பிடித்தற்காகவும் பள்ளியின் தலைமை ஆசிரியரை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக