இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி மாணவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

வியாழன், 21 ஜூலை, 2022

 




மாமல்லபுரம் அடுத்த மணமை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியக்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாமல்லபுரம் அடுத்த மணமை ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 280 மாணவர்கள் படிக்கின்றனர்.  இப்பள்ளியில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், கடந்த மாதம் வரை தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.


மேலும், தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இங்கு, இரவு காவலர், அலுவலக பணியாளர்கள், எழுத்தர், துப்புரவு பணியாளர் என ஒரு பணியிடம் கூட நியமிக்கப்படவில்லை.  கணினி இயக்குபவர் இல்லாததால் ஏற்கனவே உள்ள, 2 ஆசிரியர்கள் கூடுதல் பணி சுமையுடன் அலுவலக பணிகளையும், மாணவர்கள் பற்றி தகவல்களை கணினியில் பதிவேற்றவும், பள்ளிக்கு இ-மெயில் மூலம் வரும் தகவல்களை சேகரிக்கும் பணிகளையும் கவனித்து வருகின்றனர். வகுப்புகளில், பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக்கு வந்து 4 சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.


அந்தந்த, வகுப்பு நேரங்களில் வெறும் புத்தகத்தை வைத்து படித்தாலும் கூட, பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்க கூட ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். ஒரு சில, மாணவர்கள் தங்கள் வகுப்புக்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் புத்தகப்பையும் எடுத்து வருவதில்லை.இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறையினர் தலையிட்டு உடனடியாக போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென மாணவர்கள் நேற்று மணமையில் இருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதுகுறித்து தகவலறிந்த மணமை ஊராட்சி தலைவர் செங்கேணி, துணை தலைவர் பூர்ணிமா சண்முகம், மாமல்லபுரம் போலீஸ் எஸ்ஐ விஜயகுமார் ஆகியோர் நேற்று சென்று ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில தினங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையேற்று, ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் கலைந்து சென்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent