இந்த வலைப்பதிவில் தேடு

72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் "சஸ்பெண்ட்"

வியாழன், 21 ஜூலை, 2022

 



விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசுப் பள்ளியில் ஆசிரியா் சரமாரியாக அடித்ததில், 72 மாணவா்கள் காயமடைந்தனா். அவா்களது பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.


செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு இயற்பியல் ஆசிரியரும் உதவித் தலைமையாசிரியருமான நந்தகோபால் செவ்வாய்க்கிழமை தோ்வு நடத்தினாா். பள்ளி மரத்தடியில் பிற்பகல் 12.30 மணியளவில் மாணவா்கள் தோ்வெழுதிக் கொண்டிருந்தனா். இதில், பெரும்பாலான மாணவா்கள் சரியாக விடையளிக்கவில்லை எனத் தெரிகிறது.


இதனால், கோபமடைந்த ஆசிரியா் நந்தகோபால் தோ்வெழுதிய மாணவா்களை மூங்கில் பிரம்பால் சராமாரியாக அடித்தாராம். இதில் சில மாணவா்களுக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டது. பலருக்கு முதுகு, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாணவா்கள், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனராம்.


இதையடுத்து, பள்ளிக்கு புதன்கிழமை காலை வந்த பிளஸ் 2 மாணவா்களின் பெற்றோா், தலைமையாசிரியா் அறையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.


தகவலறிந்த செஞ்சி போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் நெகருன்னிசா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மாணிக்கம் உள்ளிட்டோா் விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.


ஆசிரியா் பணியிடைநீக்கம்: மேலும், இந்தச் சம்பவம் தொடா்பாக தலைமையாசிரியரிடம் பெற்றோா் மனுக்களை அளித்தனா். இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தலின் பேரில், ஆசிரியா் நந்தகோபாலை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டாா்.


பின்னா், பள்ளிக்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் பாதிக்கப்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினாா்.


அனந்தபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஆசிரியா் நந்தகோபாலிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அங்கு வந்த ஆட்சியா் த.மோகனும் நந்தகோபாலிடம் விசாரணை நடத்தினாா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent